ஞாயிறு, ஜூலை 18, 2010

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் வக்கிரமான உயர் ஜாதியினரின் கோரமான முகங்களும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கான உண்மையான எதிர்ப்புகள் ஏன் என்பது தற்சமயம் வெளி வரத் துவங்கியுள்ளது. இரண்டு விதமான சிந்தனைகளை எதிர்ப்பாளர்கள் தோற்றுவிக்க முயல்கின்றனர்.

முதலாவதாக இந்து மதத்தினைப் பிளவு படுத்த முயல்வதாக கூக்குரலிடும் மதவாதிகள் அல்லது மதத்தின் போர்வையில் தங்களின் மத்திய அரசின் மீதான பிடிப்பினை உறுதி செய்ய முற்படும் மேல்தட்டு வர்க்கம்.

இரண்டாவதாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நாட்டை ஜாதிவாரியான போராட்டங்களை நோக்கி நகர்த்திவிடும் எனக் கூறும் அதே மேல்தட்டு வர்ணாசிரமச் சிந்தனையாளர்கள்.

நாட்டின் வளத்தை முழுமையாகத் தங்கள் இனத்தை வளர்க்க உபயோகப் படுத்திக் கொண்ட நபர்கள் இன்று இத்தகைய வாதங்களின் மூலமும் அரசின் இந்தக் கணக்கெடுப்பு குறித்து முடிவெடுக்கும் தகுதிவாய்ந்த பதவிகளில் ஒட்டிக் கொண்டுள்ள தங்கள் ஆதரவாளர்களின் மூலமாக இந்தக் கணக்கெடுப்பை தடுக்கச் செய்யும் சூழ்ச்சிகள் எண்ணிலடங்கா??

இன்று ஆடு, மாடு , கோழி, சிறுத்தை என ஊர்வன, நடப்பன, பறப்பன என ஆறறிவு இல்லாத அனைத்தையும் ஏதாவதொரு வகையில் கணக்கெடுக்க அரசு ஆவண செய்கின்றது. அதாவது அதில் அருகிவரும் இனங்களைக் கண்டு பல்லுயிர்ப் பெருக்கத்தில் அவற்றின் இனம் வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதன்படி தனது கொள்கைகளை வடிவமைக்க முடிவு செய்கின்றது.

ஆனால் ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டும் தனது வளர்ச்சித் திட்டங்கள் சரியான விதத்தில் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என கணக்கெடுக்க அரசு தயங்குகின்றது, தடுமாறுகின்றது. இட ஒதுக்கீடு என்று ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு வழங்குவது அந்த வகுப்பின் வளர்ச்சிக்காக என்பதாகுமானால் அந்த வளர்ச்சி அந்த வகுப்பினரைச் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதானே உண்மையான அக்கறையாகயிருக்க முடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்களின் வளர்ச்சியை அறிவதற்காக அரசால் அவர்களின் இல்லத்தில் கணினி, தொலைபேசி, இணையப் பயன்பாடு, ஆடு, மாடு, கோழி வரை அனைத்தையும் கணக்கெடுக்க முடியும் போதில் இந்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட ஏன் உயர் வகுப்பின மக்களையும் அவர்கள் இந்த நாட்டின் வளத்தில் / வளர்ச்சியில் எந்த அளவிலான பயன்பாடுகளைப் பெற முடிந்துள்ளது என்பதை கணக்கெடுக்க ஏன் மறுக்கின்றது?

உண்மையிலேயே எல்லோருக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில், சமூக நீதியானது அனைவருக்கும் கிடைத்து விட்டது என்பது உண்மை என எண்ணும் அரசாக இருக்கும் பட்சத்தில் இந்த மத்திய மாநில அரசுகள் தங்களின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும் அவர்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளின் ஜாதி அல்லது வகுப்பு பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இயலுமல்லவா?? உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமானது சரியான விகிதாச்சாரத்தில் இருக்கும்பட்சத்தில் அது இத்தகைய இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் வாதத்தை தவிடு பொடியாக்கி விடுமல்லவா??

அப்படியில்லாத பட்சத்தில் அரசு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தனக்குத் தெரியும் உண்மைகளை மறைப்பதாகத்தானே எண்ண முடியும். இதற்கு அரசு அதிகாரத்தில் உள்ள மேன்மக்கள்தான் காரணம் என்பதும் அதை அரசானது மீற இயலாமலுள்ளது என்பதும்தானே காரணமாக இருக்க முடியும்.

நாட்டின் வளமானது ஏதாவது ஓரிடத்தில் குவியாமல் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் மக்களாட்சியின் முக்கியக் கூறு. இந்த வேலை வாய்ப்பு,கல்வி போன்றவை அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே அரசின் அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையானது சாத்தியமாகும்.அதுதானே நாம் தெருவெங்கும் முழங்கும் அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்கும். அத்தகைய சமச்சீரான வளர்ச்சியை அனைத்துத் தேசிய இனங்களும் அடையவில்லை என்பதன் காரணமாகத்தான் நாம் இட ஒதுக்கீடு மற்றும் பல சமூக நலத் திட்டங்களைச் செயல் படுத்துகின்றோம். எனவே நமது சமூக நலத் திட்டங்களின் பலனானது குறிப்பிட்ட இலக்கினை அடைந்து அனைவரின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதா என்பதை எப்படி அளவிட முடியும்? பிற்படுத்தப்பட்டவர்களிலும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களே அனுபவிப்பதை எப்படி நாம் சமூக நீதி என்று கூற இயலும். அதிலும் அதன் பலனையடையாத முன்னேற்றமடையாதவர்களைச் சென்றடைந்தால்தான் சமூக நீதி வென்றது என்று கூற இயலும். அதற்காகவேனும் இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.


இன்று நமது 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், வளர்ப்புப் பிராணிகள், இணையப் பயன்பாடு போன்றவற்றைக் கணக்கிட முடிவு செய்துள்ளோம். அதனையெல்லாம் கேட்டுப் பெற முடியும் கணக்காளர்களால் இந்த மக்களின் சாதியைக் கேட்டுப் பெற இயலாது என்று கூறுபவர் சிலர், சாதி தானாகக் கூறும் போது தவறாகக் கூறப்படும் வாய்ப்புள்ளது என்பவர் சிலர், தானாக முன்வந்து அளிக்கும் தகவல்களாதலால் அதில் தவறுகள் நிகழும் என்பவர் சிலர்.

இவையனைத்தையும் உண்மை என்று நாம் ஒத்துக் கொள்வோமேயானால் இந்த வாதங்களின் மூலம் நமது கணக்கெடுப்பை நாமே தவறு என்று ஒத்துக் கொள்வ்தாகவே முடியும். அப்படியென்றால் இத்தகைய தவறுகளையுடைய புள்ளி விபரங்களை வைத்துத்தான் நமது அரசு நடைபெறுகின்றது என்பதும், அதற்கு எதற்காக இத்தனை கோடிகளை வாரி இறைக்க வேண்டும் என்பதும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவையாகத் தோன்றும்.

நல்ல வேளையாக இவர்களின் உண்மையான பயம் சமீபகாலமாக வெளிவரத் துவங்கி விட்டது. அதாவது 3 மற்றும் 4.07.2010 ஆகிய தேதிகளில் பத்திரிக்கைச் செய்திகளின் விபரம் அதை தெளிவு படுத்தியுள்ளது. அதாவது ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தற்பொழுது உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அதிகப்டச இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையான 50 சதவிகிதம் கேள்விக்குள்ளாக்கப்படுமாம். மேலும் சரியான முறையில் இட ஒதுக்கீட்டு பலன்களைப் பெறாத சமூகங்கள் உள் ஒதுக்கீடு கோரும் அபாயம் வந்து விடும் என்பதாகவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்த மேல்தட்டு மக்கள் செயல் படுவது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். அதை பட்டவர்த்தனமாகக் கூற இயலாமல் தங்களால் ஆன தடைகளையிட முயன்று வருகின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இந்தக் கணக்கெடுப்பானது அவர்களின் அரசியலை முழுமையாக ஜாதீயமாக்கிவிடும் என்பதுதான்.

இது கூட ஒன்றும் புதிதான சமாச்சாரமல்ல. விடுதலை பெற்ற பின் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அந்தந்தத் தொகுதியின் வாக்காளர்களின் சாதிதான் வேட்பாளர்களின் தேர்வில் முன்னின்றது. இன்று வரை அதுதான் தொடர்கதை. இது மிகப் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய சிலருக்குப் பொருந்தாமற் போகலாம். பெரும்பான்மைக்கு இதுதான் பொருந்தும்.

தீர்த்தகிரிக் கவுண்டராகட்டும் முன்னாள் வேளாண் அமைச்சர் சி சுப்பிரமண்யமாகட்டும் பழனி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரானது அவர்களின் சாதி வாக்குகளால்தானேயொழிய வேறெதனால் ? இதில் அரசியல் கட்சிகளை விடவும் பாதிக்கப்படப் போவது மேல்தட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் இன அதிகாரிகளும்தான். அதனால்தான் அவர்கள் இதனை தங்கள் ஊடக நண்பர்களுடன் இணைந்து எதிர்த்து வருவதுடன் ஏதோ பலமான எதிர்ப்பு இருப்பதாகவும் காட்ட முயற்சி செய்கின்றனர்.

இன்னுமொரு விநோதமாக இவர்கள் இந்த கணக்கெடுப்பானது இட ஒதுக்கீட்டு அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என அச்சப்படுவது இந்த பத்திரிக்கைகளின் செய்திகளில் தெரிய வரும் மற்றொரு உண்மை. ஆனாலும், இவர்களாகவே உச்ச நீதிமன்ற கட்டுப்பாடான உயர்ந்த பட்ச இட ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதம் என்பதை அரசால் பாராளுமன்றத்தின் மூலம் மாறுதல் செய்ய முடியாது என்று இப்பொழுதே தீர்ப்பு வழங்க முயற்சி செய்வதும் 03.07.2010 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதிலிருந்து இந்தப் நாளிதழ்களும், முடிவெடுக்கும் திறன் படைத்தோரும் அவர்களின் பிரச்சனைக்கு அவர்களாகவே தீர்வு அல்லது தீர்ப்பு எழுத முற்படுவது தெரியும். இந்த உச்ச பட்ச இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு எந்தச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்படாத ஒரு முடிவை இவர்களாகவே உறுதி செய்வதும் அதை ஒரு பொதுக் கருத்தாக்கி நாளிதழ்கள் வழியே நமக்கு மூளைச் சலவை செய்வதும் இன்று வெட்ட வெளிச்சமாகின்றது.

இது கீற்று வலைத்தளத்தில் முதன் முதலாக வெளியிடப்பட்டது.

மக்களின் வரிப்பணத்தை தொண்டு நிறுவனங்களுக்குத் திசைதிருப்பும் புதுமையான தந்திரத்தில் பார்ப்பனீயம்.


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய சமூகம் சார்ந்த செயல்திட்டங்களை கமிஷன் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களிடம் அளித்து செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசீய ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான ஒதுக்க்கீட்டில் குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடையும் பணப்பயனானது 1 ரூபாயில் கிட்டத்தட்ட 15 காசுதான் என்பதாக உள்ளது. டெக்கான் க்ரானிகிள் - 21/06/2010 முதற்பக்கச் செய்தி.

இந்தச் செய்தியைப் பார்த்தால் இதில் என்ன தவறு, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு செல்ல தனியார் நிறுவனங்களைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை என நமது படித்த மக்கள் அனைவரும் நம்பும் சாத்தியம் அதிகம். உண்மை என்னவாக இருக்கும் என்பதை நாம் தொலை நோக்குப் பார்வையுடன் அணுகாவிட்டால் நமது தலையில் நம்மை வைத்தே மிளகாய் அரைக்கும் தந்திரம்தாம் இந்த முயற்சி.

21.06.2010 அன்றைய தினமலர் நாளிதழ் பார்த்தவர்கள் அதில் கடம் வாசிப்பில் போட்ட செய்தியைப் படித்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும். அந்தச் செய்தியை தினமலரில் ஏன் வெளியிட்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் அது தினமலர் சாராத இனம் என்பதால்தான் என்பதை தனிக் கட்டுரையாக எழுதலாம். அதாவது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க முயலும் தனியார் தொண்டு நிறுவனமானது குழந்தைத் தொழிலாளர்களுக்கு படிப்பிற்காக பணம் அளித்த நிலையில் அந்தக் குழந்தைகள் மேடையை விட்டு இறங்குமுன் அந்தப் பணக்கவரை திரும்பப் பெற்றுக் கொண்டன என்பதுதான் சாராம்சம். இது அந்த மாவட்ட அரசு நலத்திட்ட அதிகாரிகள் முன்னிலையிலேயே நடை பெற்றதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இதுதான் தனியார் தொண்டு நிறுவனங்களின் யோக்கியதை அல்லது லட்சணம். லட்சங்களை விடுத்து கோடிகள் லட்சியமாகி விட்ட பொழுதில் தொண்டு நிறுவனங்களின் லட்சணம் இப்படித்தானேயிருக்கும். இதில் அரசுப் பணத்தில் கொள்ளையடிக்க அரசே வாய்ப்பையேற்படுத்திதர முனைவதுதான் வேதனை. அதையும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் வாரிசான ராகுல்காந்தி புரிந்தோ புரியாமலோ பேசியிருப்பதுதான் வேடிக்கை.

புரிந்தோ புரியாமலோ என்று ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால் அவருக்குள் இந்தச் சிந்தனையை விதைத்தவர்கள் தங்கள் சமூகத்தை அரசுப் பணிகளில் இனிமேல் காப்பாற்ற இயலாமல் போகும். அப்படியொரு நிலையில் நமது இனத்தவர்கள் தேச சேவை மற்றும் தொண்டுள்ளம் என்று பெயரிட்டுக் கொண்டு இனச் சேவையை எந்தவித இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களும் இல்லாமல் வழக்கம்போல் தொடரவும், யாரிடமும் கையேந்தாமல், வரவு செலவுகளுக்கு அஞ்சாமல் இருக்கவும் அரசின் நலத் திட்ட ஒதுக்கீடுகளை ஒதுக்க முனையும் தந்திரத்தால்தான்.

இந்த தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள நபர்கள் யார்? அவர்களின் இந்த பன்முகப்பட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கக் கூடியவர்களாயிருக்கும் சாத்தியமுள்ளதா? பலதரப்பட்ட சமூகப் பிரிவுகளின் பிரச்சனைகளை உணர்ந்தவர்களாகவோ, அவற்றின் தாக்கங்களை உள் வாங்கியவர்களா? என்பது போன்ற அடிப்படையான கூறுகள் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் இது குறித்து சமூக நீதிக்கான இயக்கங்களும் அரசியல் வாதிகளும் விழிப்புடனிருக்க வேண்டும்.

அப்படியிருப்பவர்களிலும் தங்கள் சமூகம் இதனால் எவ்விதம் பாதிப்படையும் என்பதை உணர்வதுடன் அதற்காக போராடக் கூடியவர்களாயிருக்க வேண்டும். மனுதர்ம வாதிகளிடம் கொள்கையைச் சரணடைய விடும் மனம் படைத்தவர்களைத்தான் மனுதர்மம் வளர்த்து விடும், நல்லவர் என்று தனது ஊடகங்கள் மூலம் பரப்பும் அதன் தந்திரத்தில் மயங்குபவர்களல்லாத நம்மவர்களை எந்தெந்த முறையில் அலைக்கழிக்க முடியுமோ அந்தந்த முறையில் அலைக்கழிக்கும்.

மக்களுக்காய் உழைக்கும் பொழுதில் ஏற்படும் சலிப்புக்கும் வெறுப்புக்கும் நம்மவர்கள் ஆட்படாமல் இது போன்ற விஷயங்களில் விழிப்புடன் செயல் பட வேண்டும். அப்படியில்லையென்றால் எல்லாக் கொள்ளைப் புறங்கள் வழியாகவும் எதேனும் ஒரு பிரச்சனையுடன் நமது சமூக முன்னேற்றத்தை தடுக்கவும் அல்லது முடிந்தால் அழிக்கவும் ச்மூக நீதியின் எதிராளிகள் விழிப்புடன் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

- முதன் முதலில் கீற்று வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது