புதன், ஜூலை 24, 2013

உனக்கு 17 எனக்கு 76..

இதயத் திருடி ரூபியும், இத்தாலியின் முன்னாள் பிரதமரும்..


மூன்று முறை இத்தாலியின் பிரதமர். கட்டுமானத் துறை, விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆன அண்ணலும் நோக்கினார்.. அவருக்கு வயது 76, நோக்கப்பட்டவரின் வயதோ 17. இதயத் திருடி ரூபி என்று செல்லமாய் அழைக்கப்படும் அந்தப் பதினேழு வயதுப் பெண்ணும் இத்தாலியின் முன்னாள் பிரதமரான பெர்லுஸ்கோனியின் “பங்கா, பங்கா கொண்டாட்டங்களில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்களுடன் கலந்து கொண்டவர். இந்த பங்கா பங்கா, பற்றியும் இதனை இந்த பெர்லுஸ்கோனிக்கு அறிமுகப்படுத்திய கடாபியின் ஜெங்கா, ஜெங்காவும் அதிபர்களின் வாழ்க்கை பற்றிய அந்தரங்கங்கள்.


இந்த குறைந்த வயதுப் பெண்ணிடம் பணம் கொடுத்து பாலுறவு கொண்டதற்காகவும் ஏழு வருட சிறைத்தண்டனையும், பிரதமர் போன்ற பொதுப் பதவிகள் வகிக்கத் வாழ் நாள் தடையையும் வழங்கியுள்ளது இத்தாலிய நீதிமன்ற மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரி ஏய்ப்புக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்தான் இந்த பெர்லுஸ்கோனி. மேல்முறையீடுகள் முடிவடையப் பல காலங்கள் ஆகலாம் என்பதால் இவரின் சிறைத்தண்டனை உறுதிப்பட இன்னும் பல காலங்கள் ஆகலாம்.   

இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளவர். தொழில் நிறுவன அதிபரானதால் பல வரி ஏய்ப்புகள், மோசடிகள் அதன் தொடர்ச்சியாய் கூடா நட்புகள் என சகல சட்டவிரோத நடவடிக்கைகளின் நாயகன். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கட்டுமானத் தொழிலில் கோடிளைக் குவித்தவர், ஊடகத் துறையையும் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது தவறுகளிலிருந்து தப்பிக்க அவர் தேர்ந்தெடுத்த துறைதான் அரசியல். மசாலா படக் கதைகளையே விஞ்சும் இத்தகைய வரலாற்றின் சொந்தக்காரர்தான் மூன்று முறை இத்தாலியின் பிரதமராயிருந்த பெர்லுஸ்கோனி, பிரதமராவது என்ன மிகவும் கடினமான காரியமா என்ன? கையில் தேவையான பொருளும், ஊடகமும் உள்ள பொழுதில் அதென்ன இயலாத காரியமா என்ன? நிரூபித்துக் காட்டியவர்தான் பெர்லுஸ்கோனி.
இன்றைய இத்தாலியின் கடிவாளமும் இவர் கையில்தானுள்ளது. கூட்டணியின் முக்கியக் கூட்டாளியே இவர்தான். நாம் பார்த்துப் புளித்துப் போன தமிழ்ப் படக் கதைகளை நினைவு படுத்தக்கூடியதுதான் பெர்லுஸ்கோனி எனும் இத்தாலியப் பிரதமரின் கதை. வளர்ச்சிகளின் பரிணாமத்தில் பாலுறவு இல்லாமலா. அதுதான் இந்த பங்கா பங்கா கொண்டாட்டங்கள். .

பாலியல் தொழில் புரியும் பெண்களுடனான உறவு, அவர்களை கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, வயது முதிரா இளம் பெண்ணைக் பணம் கொடுத்துப் பாலுறவுக்கு ஆட்படுத்திய குற்றங்கள் மட்டுமா? கூடவே அதிகார துஷ்பிரயோகமும் செய்தவர்தான். ஆட்சியிலிருந்த பொழுதில் இந்த இதயத் திருடி என செல்லமாகக் கூறப்படும் ரூபி எனும் கரீமா எல்-மெஹ்ரூக் ஒரு திருட்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பொழுதில், அவர் எகிப்து ஜனாதிபதி ஹோஷ்னி முபாரக்கின் உறவினர் என்று ஒரு உண்மைக்குப் புறம்பான காரணத்தினைக் கூறி அந்தப் பெண்ணை விடுதலை செய்யப் பணித்தார்.

விடுதலை செய்யப்பட்ட ரூபி, மினெட்டி எனப்படும் பல் சுகாதார நிபுணரின் கட்டுப்பாட்டில் விடப்பட்டார். இந்த மினெட்டி, பெர்லுஸ்கோனியின் பங்கா பங்கா கொண்டாட்டங்களில் ஒரு கன்னியாஸ்த்ரீயாய் வேடமணிந்து ஆடியவர். அதற்காக அதிக சம்பளமுடைய அரசுப் பணியில் அமர்த்தப்பட்டவர். இதே போல் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்ணொருவரிடம், மினெட்டி பெர்லுஸ்கோனியால் தங்களை பாராளுமன்றத்தில் அமர்த்த முடியும் அதாவது அவர்களுக்கான சம்பளத்தினை அரசே வழங்கும் வண்ணம் என்று கூறிய நிகழ்வும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

தொழிலதிபர்கள் அரசியலுக்குள் வருவதும், அரசியல்வாதிகள் தொழிலதிபர்களாவதும் ஜனநாயகத்தின் தவிர்க்க இயலாத நிகழ்வாகியுள்ள நிலையில் பெர்லுஸ்கோனி நமது கண்களைத் திறந்துள்ளார். அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலுள்ள அதிகாரிகள், தங்கள் ஓய்வு காலத்தில் அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வதும் ஜன நாயகத்தினை கேலிக் கூத்தாக்குவதுடன் ஒரு விசச் சுழலாய் உருமாற்றியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் காண இயலாத கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் இத்தகைய அரசியலாளர்களாலும், அதிகார வர்க்கத்தாலும் பறி போவதுதான் வேதனை.