சனி, ஜூன் 05, 2010


சாதிவாரிக் கணக்கெடுப்பும் - நமது மாண்புமிகு அரசியல்வாதிகளும்........

இந்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி மக்கள் தொகையை கணக்கிடுவதா? வேண்டாமா ? என்பதற்கு பலதரப்பட்ட விளக்கங்களை மேட்டுக்குடி அறிஞர் பெருமக்களும், மேன்மை தங்கிய சில பத்திரிக்கைகளும், அழையா விருந்தாளிகளாக பிக் பி என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் போன்றவர்களும் தங்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.

அரசின் நலத் திட்ட்டங்கள், இட ஒதுக்கீடு போன்ற மக்களை சமூக ரீதியாக சமப்படுத்த அரசு எடுத்திடும் பல்வேறு நடவடிக்கைகள் சரியானபடி திட்டமிடப்படவும் தகுந்த நபர்களைச் சென்றடையவும் வேண்டுமென்றால் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தத் தகவல்கள் எடுக்கப்படுவதே சரியானதாகயிருக்க முடியும்.உச்ச நீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும் போதெல்லாம் இந்த எண்ணிக்கை பற்றிக் கேட்பதும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எப்போதும் அதற்கு 1931 கணக்கெடுப்பைக் காரணம் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. தேவைப்பட்டால் மத்திய அரசு கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கும் என்று ஒப்புதலும் கொடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசின் முடிவெடுக்கும் அதிகார பீடங்களில் இந்தக் கணக்கெடுப்புக்கு எதிராக ஒரு மாபெரும் சதித் திட்டமே நடைபெறுவது கண்கூடாக உள்ளது.இந்த முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகார மையங்களில் தாங்கள் சார்ந்த சாதியின் மேலாண்மை பறிபோய்விடக் கூடும் என்ற அச்சத்தினாலேயே இதற்கு முட்டுக்கட்டை போட அதிகார வர்க்கம் முயல்கின்றது. அதற்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் அச்சு ஊடகங்களில் தங்கள் சாதிப் பெயருடன் எழுதிக் கொண்டு சாதிவாரிக் கணக்கீடு இந்தச் சமுதாயத்தை சாதிவாரியாகப் பிரித்துவிடும் என்று கூறுவதுடன் இதற்குத் துணையாக நமது நாட்டின் முன்னோர்கள் இதற்காகவே சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்தனர் என்று கூறுவதுதான் விந்தையிலும் விந்தையாக உள்ளது. ரெட்டிகளோ, நாயுடுகளோ,அய்யர்களோ,அய்யங்கார்களோ,நாயக்கர்களோ, நாயக் களோ இன்னபிற மூவாயிரம் ஜாதிப் பிரிவினர்களோ தங்கள் வம்சாவழியை பாதுகாக்க அந்தச் சாதிகளிலேயே சம்பந்தம் பண்ணுவதை சரியென்று கூறிக் கொண்டு சாதி வாரிக் கணக்கெடுப்பை மட்டும் எதிர்ப்பது ஒரு கேவலமான மட்டமான தந்திரம்தானேயொழிய உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணத்திலல்ல.சமுதாயம் சாதிகளால் பிரிந்து கிடக்கின்றது என்பதுதான் உண்மை. இந்த அநீதியை சரி செய்யக்கூடிய வல்லமையுள்ள தலைவர்கள் யாரும் இன்று கிடையாது. இது பிற்படுத்தப்பட்டவர்களோ தாழ்த்தப்பட்டவர்களோ தங்கள் மீது திணித்துக் கொண்ட பிரிவல்ல. இந்தச் சமுதாயம் அவர்களை பன்னெடுங்காலமாக பல் வேறு படித்தரங்களில் நிறுத்தி அவமானப்படுத்தியுள்ளது,

தான் வில் வித்தை கற்றுத் தராத ஏகலைவனின் விரலை தனது சிலையைக் குருவாகப் பாவித்து கற்றுக்கொண்ட காரணத்திற்காக அவன் பெரு விரலைக் காணிக்கையாகப் பறித்தது இந்தச் சமுதாயம்தானே.தனது மோட்சத்திற்காகத் தவமியற்றிய சம்பூகனின் தலையை இந்தச் சமுதாயத்தில் தவமியற்றும் உரிமை சூத்திரனுக்கில்லை அதனால்தான் எனது மகன் இறந்து விட்டான் என்று கூறிய அந்தணனின் வாக்கினை ஏற்றுத்தானே தசரத ராஜகுமாரன் கருணையே வடிவான ராமன் கொய்தான். நந்தனை உள்ளே அழைக்க தெய்வத்தாலும் இயலவில்லை என்பதால்தானே அந்த ஆற்றலற்ற தெய்வமானது நந்தியை 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என விலகச் சொன்னது.இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பில் நந்திகளை விலகச் சொல்லுமளவிற்குக் கூட எந்தத் தெய்வத்திற்கும் மனம் வரவில்லையே அதுதான் கொடுமை. தீயில் புண்பட்டு இறந்த நந்தனை பொன்னார் மேனியனாய் சிவலோகப் பதவியடைய வைத்த சமுதாயம்தானே.

இன்னும் கூட ராகுல் காந்தியால் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குச் செல்ல முடிகின்றதேயொழிய அவர்களை சமுதாயத்தின் மையப் புள்ளியாக மாற்ற இயலவில்லை என்பதுதான் இந்தச் சமூகத்தின் கோரமான முகம்.இந்தச் சூழ் நிலையில் நமது இருபதாம் நூற்றாண்டில் இவையெல்லாம் இல்லை என்று கூற சாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்களால் இயலுமா?? எதிர்ப்பவர்கள் தங்களின் பெயரின் பின்னாலுள்ள சாதிப் பெயரைக் கைவிடக்கூட இயலாதவர்கள்.

ஆனந்த் சர்மா என்று இன்னும் சாதிப் பெயரை அலங்காரமாக கைவிடாத மத்திய அமைச்சர் ஏதோ கணக்கெடுப்பினால் இந்தியா இனிமேல்தான் சாதிவாரியாகப் பிரியும் என்பது போல் பேசுவதுதான் விந்தையாக உள்ளது. உழைக்கும் மக்களுக்கான அரசியல் இயக்கம் என கூறிக் கொள்ளும் நமது மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி தங்களது கட்சி ஏன் பலமிழந்து வருகின்றது என்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணராது உள்ளது.இன்னும் சாதீயம் சார்ந்த இந்திய நிலையினை மறுதலித்து வருவது அதனை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். இந்தியாவில் உழைக்கும் மக்கள் யாரென்றால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாகத்தான் இருக்க முடியும் என்பதை உணர மறுப்பது தலைவர்கள் அல்லது அதன் மத்தியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இந்தச் சமுதாயங்களைச் சாராத முற்பட்ட இனமாயிருப்பதனால்தானே. அதனால்தான் பாராளுமன்றத்திலும் சரி அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் சரி அவர்களின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஒரு வேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புரோகிதம் எனும் தொழில்தான் மிகுந்த உடலுழைப்பைக் கோருவது என்பதால் அந்தத் தொழில் செய்பவர்கள்தான் உழைக்கும் மக்கள் என்ற எண்ணம் இன்னும் கலையாது உள்ளதோ என்னவோ? இதை அவர்கள் பொலிட் பீரோதான் முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்கள் தாங்களாகத் தரும் விவரங்கள் என்பதனால் அது உண்மையான கணக்கெடுப்புக்கு வழி வகுக்காது என்று கூறுகின்றார்.வாதத்திற்காக அதைச் சரியென்று எடுத்துக் கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய எண்ணிக்கைக்கு இதுவரையில் அவர் குரலெழுப்பாதது ஏன்? மேலும் தாங்களாகக் கூறுவதாலேயே யாரும் பிற்படுத்தப்பட்டவர்களாகி விட முடியாது என்பதையும் அதன் காரணமாக அதற்கான சலுகைக்கு அவர்கள் உகந்தவர்களாகி விட மாட்டார்கள் என்பதும் புரியாமலா பேசுகின்றார். ஒருவேளை எண்ணிக்கை குறைவாக வந்து விடும் என்று உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்கள் மேலுள்ள அக்கறையால் அவர் அச்சப்படுகின்றாரோ ? என்னவோ? மக்கள் தானாக முன்வந்து தராவிட்டால் அவர்களுக்கு அபராதம் தீட்ட அரசு திட்டமிடுகின்றதென்பதை சீத்தாராம் யெச்சூரி கண்டிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்று அங்கலாய்க்கும் திரு பிரகாஷ் காரத் இன்னும் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிக் கூறத் தயங்குவதும், திருமதி பிருந்தா காரத் அவர்கள் உள் ஒதுக்கீடின்றி பெண்கள் இட ஒதுக்கீடு தற்போது உள்ள நிலையிலேயே சட்டமாக்கப்படவேண்டும் என்றும் கூறுவது பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை முழுமையாக்கும் என்பதால்தானோ என்னவோ?

இவர்களெல்லாம் மண்டல் குழு அறிக்கையின் பயனாக இன்று மத்திய அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடி விடும் என அச்சப்படுவதால்தான் இன்றுவரை அது குறித்து எந்த அக்கறையும் காட்டாது உள்ளனர். இது குறித்து மத்திய அரசிடம் இன்று வரை வெள்ளை அறிக்கை கேட்டதுண்டா? இந்தப் பாட்டாளிகளுக்காக அவதாரமெடுத்த கட்சி? இன்றுவரை பெரும்பான்மைச் சமுதாயமான பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரமுள்ள பதவிகளில் சொற்ப சதவீதவீதத்திலேயே உள்ளனர் அதாவது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை விடவும் பின் தங்கியுள்ளனர் என்பதை எங்காவது பேசியோ கேள்வி கேட்டோ உள்ளனரா?

இந்தியாவின் நவீன வேளாண் அமைச்சர், உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வழி வகுத்தவர் என்றெல்லாம் பேசப்படும் சி சுப்பிரமணியம் அவர்கள் தனது தொகுதியாக ஏன் பழனி நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்தார் என்றால் அது முருகனின் திருத்தலம் என்பதாலல்ல அங்கு அவரின் இன மக்கள் அதிகமாக இருப்பதால்தான்.

படித்தால் , பதவிகளில் அமர்ந்து விட்டால் சாதிகள் அழிந்து விடும் என்பது உண்மையானால் படித்த வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் நிற்க வேண்டும். அங்குள்ள மக்கள் சாதி என்பதையே எண்ணாது மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு வாக்களிப்பார்கள்தானே. ஏனென்றால் அங்கு சாதி முக்கியமாயிருக்காதல்லவா?? படித்த உயர்ந்த அந்த மக்கள் திறமையாளர்களைத்தானே தேர்ந்தெடுப்பார்கள்.

தென் சென்னைத் தொகுதியில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் எனப் பெயர் பெற்ற திரு இரா செழியன் அவர்கள் நின்ற போதில் அந்த படித்த நபர்கள் அதிகம் வாழும் தொகுதி உறுப்பினர்கள் அவரை குறைந்த பட்ச வாக்குகள் வித்தியாசத்தில் கூட தேர்ந்தெடுக்க மறுத்தது சாதியன்றி வேறொன்றுமில்லை. அதை அவர் வேண்டுமானால் மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். உண்மை பட்டவர்த்தனமானது. இவர்களெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுப்பதனால் இவர்களுக்கு தென் சென்னையில் அதிக வாக்குகள் விழ வேண்டுமல்லவா? உண்மை அதுவல்ல.

வளர்ந்து விட்டவர்களையும் வசதி படைத்தவர்களையும் தங்களது ஆளுமைக்குள் கொள்வினை கொடுப்பினை மூலம் கொண்டு வந்து விட்ட வளர்ந்த சமுதாயத்தின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இவர்கள் மாறியிருக்கலாம். ஆனால் அந்தச் சமுதாயங்கள் இவர்களை இவர்களின் பதவியும் பணமும் இருக்கும் வரைதான் தங்களவர்களாய் ஏற்றுக் கொண்டது போல் நடிக்கும். பதவியிழந்த மறு நிமிடம் இவர்கள் எந்தத் தெருவுக்குள் சொந்தம் கொண்டாட முடியும். அப்படியான நிலை வந்தால் உடனே இவர்களெல்லாம் ' நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களில் ஒருவன், நமது இனத்தை உயர்த்திப் பிடிக்க எனக்கு வாக்களியுங்கள்' என்று பொய்யாய் பேசுவதைக் கேட்டு கண்ணீர் மல்க நமது வாக்குகளை நாம் இவர்களுக்குத் தரத் தயாராயிருப்பதால்தானே இவர்கள் இந்தத் தில்லு முல்லுளை அரங்கேற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக