சனி, ஜனவரி 14, 2012

இரண்டாவது தேசப் பிதாவா?........ தேசத்தின் முதலாவது மோடி மஸ்தானா?

உயர்த்திப் பிடிக்கும் ஊடக உலகம். சந்து பொந்துகளில் முடங்கிக் கிடந்த ஆரியம் அன்னா எனும் ஆரியக் கூத்தாடியை தேவதூதனாக, சர்வ ரோக நிவாரணியாக்க முயலும் விந்தை. அமெரிக்காவில் அடிமைத் தொழில் புரிபவர்கள் இந்தியாவைத் தங்களுக்குத் தேவையான வகையில் வடிவமைக்க முயலும் கொடுமை. வில்லங்க உயர்ஜாதியானது புரிந்தே தங்கள் கட்டுமானத்தினைச் சரி செய்து கொள்ளவும், விவரங்கெட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களோ ஊடக மற்றும் மின் ஊடகப் புரட்டுகள் புரியாமலேயே இருப்பதை இழக்கவும் தயாராகின்றனர்.

அன்னா எனும் அவதாரம்:

லட்சக் கணக்கானவர்களை சிறை நிரப்பும் போராட்டம்.. தயாராகுங்கள்!!.. என்றார் அன்னா. இந்த நாட்டின் இரண்டாவது தேசப் பிதாவோ..முதல் தேச மோடி மஸ்தானோ.. கூடியிருந்த கூட்டம் கும்மாளமிட்டதாகக் கூறிய ஊடகங்களைக் கண்டு நானும் இந்த நாட்டின் சிறையெல்லாம் போதாதே.. என்ன செய்யும் இந்த அரசாங்கம் என இரவெல்லாம் தூக்கம் பிடிக்காமல் வேதனைப்பட்டேன். இவர் மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தால்.. அய்யய்யோ நாட்டுக்கு ஒருத்தர் பண்ற அட்டூழியமே தாங்க முடியவில்லை..ஊருக்கு ஒருத்தரிருந்தால் அவ்வளவுதான்.. இந்தியாவின் உணவு தானிய ஏற்றுமதி அதிகரித்து .. ஆமா எல்லாருமே வெவஸ்தையில்லாம எதுக்கெடுத்தாலும் நான் சொல்வதுதான் சட்டம் இல்லைன்னா உண்ணாவிரதமிருப்பேன் எனும் நிலையில்..அன்னியச் செலாவணிகள் குவிந்து இந்தியாவே வல்லரசாகி(விஜயகாந்த் படமல்ல) விடுமே..இந்த அர்த்தங்கெட்ட கூட்டம் வேறு சமயத்தில் வல்லரசாவது நல்லதா? நல்லரசாவது நல்லதா? என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் போட்டு அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இதே நடுத்தர வர்க்கத்தை விடுமுறை நாளில் உச்சுக் கொட்டிப் பார்க்க வைத்து ,, விளம்பர இடைவேளைகளில் வருமானம் பார்த்து .. எத்தனை பேருக்கு அன்னாவால் வேலை கிடைத்து.....எனத் தொடர்ந்த எண்ணங்களில் இருக்கும் பொழுதில்... அந்தோ பரிதாபம் ...கூடிய உயர்சாதி உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கும், விவரங்கெட்ட மற்ற நடுத்தர வகுப்பினருக்கும் வேடிக்கைதானே பிடிக்கும். 

ஏதோ கூட்டம் பார்த்து வேடிக்கை பார்க்கச் சென்றால் ஜெயிலுக்குத் தயாராகுங்கள் என்றால் .. நாம்தான் தேவையான சிக்கல்களையே தவிர்த்து விடும் பொழுதில் அனாவசியமான சிக்கல் என்றால் நாமாகவே அலறியடித்து பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டோமா..! லட்சம் பேர் தயார்..!! இப்பொழுதே ஒன்றரை லட்சம் பேர் பெயர் கொடுத்து விட்டனர்..! அனேகமாக ஒரு கோடிப் பேராவது ஜெயிலுக்குப் போவார்கள் !! என இந்த ஊடகங்கள் ஓங்கி ஒலித்தன. நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்ததும் பெயர் கொடுத்த கூட்டம்தான்.

இதனையெல்லாம் பார்த்தும் கேட்டும் பழகி விட்டிருந்த பாழாய்ப் போன கோடானு கோடி.. மக்கள் சலனமின்றி இருந்ததனை எந்த ஊடகமாவது கோடிட்டுக் காட்டியதா? ஏதோ இந்த தேசமே அன்னா எனும் கூத்தாடியின் பின்னே அணிவகுத்து நிற்பது போன்ற பிரமையை மாயத் தோற்றத்தை உருவாக்கத்தானே முயன்றன. ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் அன்னா தில்லியில் உண்ணாவிரதமிருந்த போதே அந்த அரங்கின் வெளியே சுறு சுறுப்பாய் நடந்த வியாபாரங்களை, அதனை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினை அரங்கின் உள்ளிருந்த கூட்டத்தை விடவும் அதிகம் என எழுதியது. இந்தப் பொய்மையை ஏன் அன்னாவோ அவரைச் சுற்றியுள்ள நபர்களோ, உயர்சாதி ஊடகக் கும்பலோ உணராதது போல் நடித்தன.. அல்லது உண்மையே போல் பரப்பின..

அவர்களுக்குத் தெரியும் இந்த பலூன் காற்றுப் போனதாக ஆகிவிடுமென்று.ஆனால் அதற்குள் தங்கள் வர்ணாசிரமத்தினைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு அமைப்பை, ஏனென்றால் இன்று உச்ச நீதிமன்றத்தையும் கூட சில சமயங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்ட சூழலில்.. அவர்களும் சில பல தீர்ப்புகளை ஒப்புக்காகவேனும் பெருவாரியான மக்களுக்கானதாக அளிக்க ஆரம்பித்து விட்ட பின் ,கேள்வி கேட்க இயலாத அமைப்புகளை உருவாக்க சிறந்த முறையில் நடத்தப்பட்ட நாடகம்தான் இந்த அன்னா நாடகம். 

ஊழல் ஒழிப்பென்றால் ஒரு செயலைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களைத்தானே சேர்க்க வேண்டும். அதில் ஏன் அநாவசியமாக சி மற்றும் டி பிரிவு ஊழியர்களைச் சேர்க்க வேண்டும் என அடம் பிடிக்க வேண்டும். இந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் தன்னிச்சையான அதிகாரம் படைத்தவர்களல்ல. கேட்டால் உள்ளூர் தபால் நிலையச் சிப்பந்தியால்தான் ஊழல் இந்த நாட்டில் ஆறாய்ப் பெருகி ஓடுவதாய் ஒரு ஒப்பாரி இந்த நபர்களிடமிருந்து. இந்த நபர்கள் அறக்கட்டளை நடத்த அதுவும் அவர்களுக்கு வேண்டிய மேல்தட்டு வர்க்கத்திற்கு சேவகம் செய்யக் கையேந்தும் பன்னாட்டு நிறுவனங்கள் ஊழலென்றால் என்னவென்றே அறியாதவை போல் ஊழலின் ஊற்றுக் கண் அந்தக் கடை நிலைச் சிப்பந்திதான் அவனைப் பிடி என்பது போல் ஓலமிட்டது கொடுமையிலும் கொடுமை. 

ஏமனில் போராட்டம். எகிப்தில் போராட்டம். எல்லாமும் வலைத்தள மற்றும் ஊடக வெளிப்பாடுகள் என்றால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மக்களுக்கான அரசாங்கம் வழக்கில் இல்லை. அதனால் அங்கு போராட்டம் வந்தது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் செயல்படுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனைப் போல் இங்கு ஏதாவது செய்து அரசைக் கவிழ்க்க நினைத்தவர்களுக்கு 'ஹசாரேயிசம்' கைகொடுக்கவில்லை. 

வேண்டுமானால் அன்னா, அரசாங்கம் "நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டுக் காவலில் வைத்து விட்டோம், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் வீட்டுக் காவலில் இருக்கின்றோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" என அறிவிக்கும்வரை உண்ணாவிரதம் என அடுத்த அறிவிப்பை வெளியிடுவது நல்லது. ஊடகங்களும் நாட்டின் நூறு கோடி மக்களும் வீட்டுக் காவலில் இருக்கின்றனர். அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது என எழுதலாம்.உலகமே இந்தியாவை உற்றுப் பார்க்கின்றது எனப் புலம்பலாம். 

அன்னா என்ன புத்தரா அல்லது தவறேதும் செய்யாத புனிதரா? தனது சொந்த கிராமத்தில் மதுக்கடை கூடாதென்கிறார். காந்தீயவாதியல்லவா? நல்லதுதான். புலால் உண்ணக் கூடாது என்கிறார். சரிதானே. புத்தரின் வழி வந்தவராயிருப்பாரோ என்னவோ? அல்லது அவர் வயிற்றுக்குள் காந்தீயவாதியென்று தொப்பி போட்டுக் கொள்வதால் ஆட்டுக்குட்டி கத்தியதோ என்னவோ? உள்ளாட்சித் தேர்தல் கூடாதென்கிறார். அஹிம்சாவாதி.. வன்முறைக்கு வித்திடும் என்று எண்ணுகின்றாரோ?... வர்ணாசிரமத்தை வளர்க்கிறார்..இந்தியாவே வர்ணாசிரம நாடுதானே..அதையெல்லாம் அன்னா அடுத்த அவதாரத்தில் சரி செய்வாரென கிரணோ, கேஜ்ரியோ சொல்லக் கூடும்..அல்லது ஊழல் சரியானால் இந்த வேற்றுமை மறைந்து விடும் எனக் கூறலாம்.. சரி இந்தக் கட்டுப்பாடுகளை தனது கிராமத்தில் மீறுபவர்களைக் கட்டி வைத்து அடிக்கிறாரே.. சட்டத்தைத் தன் கையில் எடுக்கும் இந்த அதிகாரம் இவருக்கு யார் தந்தது.. இப்படி வளர விட்டதால்தான் இவர் இன்று தன் மனம் போன போக்கில் தான் சொல்லும் லோக்பால்தான் சிறந்தது என்கிறார்.. இருக்கும் ஆயிரம் சட்டங்களில் செய்ய முடியாததையா இந்தப் புதிய லோக்பாலில் செய்ய முடியும் என நம்புகிறார்..எனக்குத் தெரிந்ததென்னவோ ரொம்பப் போனால் நாலரைப் பாலும்.. அதைவிட்டால் முப்பால் சொல்லும் திருக்குறளும்தான்....மின் ஊடகங்களுக்கு அன்னாவின் ஊரில் அனுமதியில்லையாமே.. அந்தச் சர்வாதிகாரியைப் புனிதராக இந்த மின்னூடகங்கள் காண்பித்தால் அதனைத் தனது கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் சற்றும் நம்பமாட்டார்கள் என்பதால் அன்னா இப்படி சென்சார் பண்ணியிருப்பார்.

இப்படியாக இந்த இருபதாம் நூற்றாண்டில் கற்கால உலகை சட்டங்களை மீறி உருவாக்கி வரும் சமூக எதிரிதான் அன்னா. அவ்ரின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாய் வெட்கம் கெட்டுச் செயல்படும் ஊடகங்கள்.

நான் துணிந்தவள்:

தெருவில் வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல் இந்த அன்னாவை வைத்து கிரண் பேடியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் நன்றாகத்தான் வித்தை காட்டுகிறார்கள்.புதிய சு'தந்திரப்' போருக்குத் தயாராகும்படி தந்திரமாய் நாடக அரங்கத்தில் நடிப்பது போல் தேசியக் கொடியைச் சுழற்றும் இந்த ஆண்டின் சிறந்த வித்தைக்காரர் கிரண்பேடி. 

நான் துணிந்தவள் எனும் அவரின் தலைப்புக்கேற்ற பாத்திரமல்ல இந்த வித்தை. துணிந்தவர்தான் தனக்கான விமானக் கட்டணத்தைச் சலுகையில் பெற்றுக் கொண்டு தன்னை அழைத்த நிறுவனங்களிடம் சலுகையில்லாத முழு விமானக் கட்டணத்தை பெற்றுக் கொண்டிருந்தார். அதனைக் கூறியவுடன் தான் அதிகமாக
 வாங்கிய கட்டணத்தைத் தனது அறக்கட்டளைக்குப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். இத்தகைய செயலை நியாயப் படுத்தத் துணிந்தவர்தான் இந்த கிரண் பேடி. வெளியில் தெரிந்தது இப்போதைக்கு இது மட்டும்தான். துணிச்சல் தொடரும்.. 

இந்தியாவின் ஆகச் சிறந்த கடன்காரர்..

கேஜ்ரிவாலின் கதையோ பரிதாபம்..இந்தியாவின் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த கடன்காரர் என்ற விருதுக்கு இவர் தயார்.. இந்திய அரசு பரிசு தரத் தயாரா? ..மனைவி வருவாய்த் துறையில் மிகவும் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் பதவியிலிருக்க ..மாற்றப்பட வேண்டிய காலம் கடந்தும்.. அவருடைய துறையின் அனுமதி கோரப்படாமலேயே அதே பிரிவில் தொடர்ந்து பணியாற்றியவர்..இந்த முறைகேட்டுக்கு எந்த அன்னா உண்ணாவிரதமிருப்பாரோ.. கேஜ்ரிவாலுக்குத்தான் வெளிச்சம்.... இதில் இந்த முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியோ வருமான வரித்துறைக்கு இவர் கட்ட வேண்டிய ஒன்பது லட்சத்தைக் கடன் வாங்கிக் கட்டப் போவதாக ஊடகங்கள் ஊளையிடுகின்றன.(போர்ட் பவுண்டேஷன் அளித்த பணம்..அது அறக்கட்டளைக்குச் சொந்தமானது..அவர்களுக்காகத்தான் அது போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான் இந்த நாடகமெல்லாம்.. மக்களுக்கு.....!!). இந்த அரசாங்கம் இப்படிச் செயல்படலாமா? பணப்பற்றாக்குறையால் ஒரு முன்னாள் IRS அதிகாரியே பரிதவிக்கும் நிலைக்கு ஆட்சியாளர்கள்தானே காரணம். அவருக்கே அப்படியென்றால் சாதாரணமானவர்கள் என்னென்ன துயரப்படுவார்கள்.. அவர்கள் தங்கள் பிரச்னையைத் தீர்க்க எந்த அன்னாவைத் தேடி உண்ணாவிரமிருந்து அரசை மிரட்ட முடியும்.

இவர்களுடன் இந்தியாவின் அறிவிக்கப்படாத சட்ட மேதைகளான பூஷண்கள் இருவர், கர்நாடக லோக்காயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோரும் இணைந்து ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை அச்சுறுத்துவதும், தாங்கள் சொன்னதுதான் சட்டம் என்றும் கூறுவது எந்த வகையான நியாயம் என்பது புரியவில்லை. இதனை கண்ணை மூடிக் கொண்டு குறுகிய நோக்கத்திற்காக ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அதனை ஆதரிக்கும் ஊடகங்கள் என யாருக்கும் வெட்கமில்லையென்பதுதான் உண்மை.

யார் சொல்வதையும் ஏற்க மாட்டோம். நாங்கள் சொல்வதுதான் சரி. அரசியலமைப்பாவது, நாடாளுமன்றமாவது, மண்ணாங்கட்டியாவது... நாங்கள் சொல்லும் லோக்பால் எதற்கும் கட்டுப்படாத அமைப்பாக(நாங்கள் சொல்வதைக் கேட்கும் அமைப்பாக எனப் பச்சையாகக் இப்பொழுதே கூற இயலாதென்பதால்) இருக்க வேண்டும். அதன் உறுப்பினர்கள் இட ஒதுக்கீட்டின்படி இருக்கக் கூடாது, அரசு அதில் தலையிடக் கூடாது.நாங்கள் நியமிப்பவர்கள் மட்டும்தான் அல்லது நாங்களே அதன் உறுப்பினர்களாக முடியும்..அதாவது உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் போல எங்கள் எண்ணங்களின்படி நடப்பவர்கள் அதாவது நாங்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள் தாங்கள் சொல்வதுதான் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது புதிய மனுக்களாக இவர்கள் தங்களைத் தாங்களே பாவித்துக் கொள்வதனால்தானே.

புதிதாய் பிறந்த மனுக்கள் புறப்பட்டு வருகிறார்கள் ...சாமான்ய மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...உங்கள் உரிமைகளை, உடைமைகளைப் பத்திரப்படுத்துங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக