ஒரு சிறந்த படைப்பானது சரியான விளம்பரமின்மையாலும், பல பெரிய படங்களின்
போட்டியாலும் கடந்த ஆண்டில் மக்களின் கவனத்தில் பதியாமற் போன நிலையில், அதனை
மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணிய இயக்குனர் சேரன்
அவர்களும்,
தனது முதல் படைப்பில் வியாபார நோக்கம் சிறிதுமில்லாமல் தனது
மனதைப் பாதித்த நிகழ்வுகளை மட்டும் முன்னிறுத்தி, ஒப்பனையற்ற கதை, ஒப்பனை மறந்த
அந்தக் கதை மாந்தர்களாகவே உலா வரும் பெரியவர்களும், பாத்திரமறிந்து தங்கள்
மிகைப்படுத்தாத நடிப்பால் சிறப்புச் சேர்த்த சினனஞ் சிறு
குழந்தைகளும்,
கூத்துக் கலைஞராய் வந்து , வந்த இருபது நிமிடங்களிலும் தனது
பாத்திரத்தினை எந்த உலக நாயகரும் இதைவிட சிறப்புறச் செய்ய இயலாது என
நிரூபித்ததுடன், தனது மகனின் திரைக்கனவை பொருள் தந்து நனவாக்கிய தந்தை ஆகிய
அனைவருமே மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
மகன் தந்தைக்காற்றும் உதவி
இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
ஆம் இந்தக் குறளுக்கு
விளக்கமாக சங்ககிரி ராச்குமார் திகழ்கிறார் என்றால்,
அவரின் தந்தை,
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
எனும்
குறளுக்கு விளக்கமாக விளங்கியுள்ளார்.
கோடிகளில் புரளும் நாயகர்கள்..
மின்னும் வெள்ளைத் தோல் தாரகைகளுடன்...மிட் நைட் மசலாவில் {டாடி மம்மி வீட்டில்
இல்ல.. தீப்பிடிக்க..தீப்பிடிக்க.. என்று } பார்க்கத் தகுந்த பாடல்களை நம் வீட்டின்
வரவேற்பறையில் கொண்டு வந்து இளைஞர்களின் / இளைஞிகளின் உணர்வுகளைத் தூண்டும்
நிலையில்..நாளைய முதல்வர்கள் நாற்காலிக் கனவின் மிதப்பில், தங்களின் அரசியல்
கனவுகளுக்கு வடிவம் தரும் கதைக் களனில் இந்த மக்களை ரட்சிக்கும் தேவ தூதர்களாய்த்
தங்களைக் காட்டிக் கொள்வதும், சுள்ளான்களின் கொலவெறிக் குத்தாட்டப்
பாடல்களும்..பதிலுக்கு விரல் வித்தையின் சவடால்களுமாக ஒரு
புறமென்றால்..பிரமாண்டங்கள்..ராமாயணங்களின் மறு வடிவங்கள்..உலகத்தர இயக்கம்
(ஒன்றுமற்ற குப்பைகளைத் தங்கள் பெயரால் விற்பனை செய்வதுதான் உலகத் தரம்)
இவையெல்லாம்தான் இந்த ஊடக உலகம் முன்னிறுத்தும் படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள்.
எவ்வளவு மன தைரியம் வேண்டும் இந்த சூழலில் தன் கண் முன்னால் கண்ட தன்
மக்களின் அறியாமை, அதன் வலிகள் தந்த வேதனை அதற்கு எது மாற்றாக , மருந்தாக அமையும்
என்பதை நேர்மையாய்ப் பதிவு செய்யும் துணிவு. ஒரு புதுமுக இயக்குனர் , நடிகர் ..தனது
தந்தையின் பண உதவியுடன் சொந்தப் பணத்தில்..கொள்கையையே யாராவது மேடை போட்டுத்
தந்தால் பேசுவோம் என்றிருக்கும் நிலையில்..தங்கள் சொந்தப் பணத்தில் வியாபாரம்
பற்றி அஞ்சாது உருவாக்கிய மிகச் சிறந்த நேர்மையான திரைக் காவியம் இந்த வெங்காயம்.
உலக அளவில் சிறந்த இயக்குனர் எனப் போற்றப்படும் ஜப்பானின் அகிரா
குரோசோவா அவர்கள் உருவாக்கிய செந்தாடி(Red Beard) எனும் திரைப்படத்தினைப்
பார்க்கும் பொழுதிலெலாம் சில காட்சிகள் மனதை விட்டு அகலாத சித்திரங்களாய் பதிந்து
விடுவதுண்டு. மொழி தெரியாத நிலையிலும் அதில் வரும் கதாபாத்திரங்கள், கதை நிகழும்
களங்கள் நாம் நமது நாட்டில் இன்னும் சந்திக்கும் நிலையிலிருப்பதானால் நம்
நெஞ்சத்தில் இடம் பிடித்து விடும். இந்தப் படம் அந்தக் களத்திற்குச் சற்றும்
சளைத்ததல்ல என்பதும், அதன் சில கூறுகளை விஞ்சும் வகையில் அந்தக் கூத்துக் கலைஞரின்
பரிதவிப்பும், பாட்டி பேரனுக்கிடையேயான பாச உணர்வும் அன்பின் வலிகளாய்ப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கதை ஜாதகம், ஜோதிடம், நரபலி என சுற்றித் திரியும் சிலர்
அடுத்தடுத்துக் காணாமல் போவதும், அவர்களைத் தேடி அலையும் காவல்
துறையும்தான்.காவலதிகாரியின் காதலும் அதன் முடிவும் என அனைத்து முடிச்சுகளுமே மூட
நம்பிக்கையெனும் மையப் புள்ளியை விட்டு எந்த இடத்திலும் விலகாமல் செல்கின்றது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் காக்க கடைசியில் காவலதிகாரி துப்பாக்கியைத்
தூக்குவதுடன் கதை முடிகின்றது.வெள்ளிக் கிழமைகளில் பணம் தரலாமா? கூடாதா? ராகு
காலம்.. எமகண்டம்..நல்ல நேரம்..நல்ல நாள் என்று இருக்கும் இருபத்து நாளு மணி
நேரத்தில் மனிதன் பிரித்துப் பார்த்தால் அவன் மனதில் எண்ணுவது போல வாழ மிஞ்சும்
நேரம் என்ன? என்ற அடிப்படைக் கேள்வி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த
சிக்கல்களில் சிக்கிச் சிதறும் மனித வாழ்வைச் சீரமைக்க எத்தனை பேர் பாடுபட்டாலும்,
இதனை தங்களின் வாழ்வாதரமாகக் கொண்டுள்ள அடிப்படைவாதிகள், எதிர்பார்ப்புகளாலும்
ஆசைகளாலும் நிறைந்து கிடக்கும் மக்களை அவர்களின் எதிர்காலம் நலனுக்காக என்று கூறி
ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளனர். புத்தர் சொன்னார்..வள்ளலார் சொன்னார்..பெரியார்
சொன்னார்.. என்ன நடக்கின்றது.. இந்த நபர்கள் இத்தகையவர்களின் கருத்துக்களை
முறியடிக்க அனைத்துத் தந்திரங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த மூடக்
கருத்தினை எதிர்த்து நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் சொன்ன போதும்
இந்த வைதீக சனாதனிகள் எதிர்க்குரலை வலைத் தளம் வரை பரப்பியது குறிப்பிடத்தக்கது.
அவ்வளவு ஆளுமையும் அதிகாரமும் அவர்களிடம் உள்ளது.
பாட்டி பேரன்
இருவரிடையேயுள்ள பாச உணர்வும், இயலாமையும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் நடிகராகவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். அந்த நடிப்பு இன்றைய புகழ்
பெற்ற நட்சத்திரங்களுக்குப் பாடமாயுள்ளது என்றே சொல்லலாம். அவரின் தந்தை கூத்துக்
கலைஞராய்த் தனியே இன்றைய உலக நாயகர்களுக்கே பாடமெடுத்துள்ளார் என்று கூறலாம்.
கூத்துக் கலைஞரின் நடிப்பும், அந்தச் சிறுவனின் நடிப்பும் கண்களைக் குளமாக்கிச்
செல்கின்றன. கதை மக்களிடம் உள்ளது. எங்கெங்கோ தேடி புரியாத கதைகளை விளக்கி
வெங்காயமாக்கி மக்களையும் வெருக் காயங்களாக்கும் கதைகளை விட அவர்களின் கதைகள் அதன்
படிப்பினைகளால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் கதைகள்தான் இன்றைய
தேவை. இதுதான் வெங்காயம்..
இயல்பான கிராமத்துப் பெண்ணாக வரும் நாயகி,
சைக்கிள் கடைச்சிறுவன் அவர்களுக்கிடையேயான சம்பவங்கள் இயல்பான நகைச்சுவை,
கருத்தாழமிக்க உண்மையிலேயே சவுக்கடியாய் வந்து விழும் இயல்பான வசனங்கள் என மண்ணின்
மாந்தர்களின் வாழ்வினை அவர்களின் அறியாமையையும் இயல்பாய் எடுத்துரைக்கின்றது.
சத்தியராஜ் அவர்கள் கௌரவ வேடத்தில் வந்து மனிதர்கள் மேல் கொண்ட உயரிய அன்பினால்
இந்தச் சடங்குகளை எதிர்த்து வாழ் நாள் முழுதும் சளைக்காமல் போர் புரிந்த
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அன்பினை கோடிட்டுக் காட்டுவதுடன்
தன்னம்பிக்கையும், தன்மானமும் தான் முக்கியம் எனச் சொல்லிச் செல்கிறார்.
பேராசிரியர் சுபவீ அவர்களின் பாடலும், அறிவுமதி அவர்களின் பாடல்களும் கதையின்
போக்கறிந்து எழுதப்பட்டுள்ளது.
அதிகமான ஜனத் தொகை கொண்ட நாட்டில்,
அனைவருக்குமான கல்வி வசதி வாய்ப்புகள் எட்டாத நிலையில் இந்தக் கடவுள்களும், ஜோதிட,
ஜாதக, நரபலி (சில காலங்களின் முன் உடன் கட்டையேறுதல்) போன்ற மூடப் பழக்கங்களும்
குறிப்பிட்ட சிலருக்கு வாழ்வாதராமாக மாறிப் போனது. அவர்கள் தங்களின் பிழைப்புக்காக
அதனைத் தக்க வைக்கச் செய்யும் முயற்சிகள், இந்த நாட்டில் அறியாமையில் உழலும்
மக்களின் வாழ்க்கைச் சீரழிவுக்குக் காரணமாயுள்ளது. மக்களை அறிவியல் பூர்வமான
சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டிய கடமை இந்த அரசுகளுக்கு உள்ளது. அது
அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது குறித்த
சிந்தனையேயில்லாத, மத உணர்வுடைய பிற்போக்குத் த்னமான நீதியரசர்கள் உள்ள நாடும்
இதுதான். அதனால்தான் மக்களின் நம்பிக்கையை மட்டும் வலியுறுத்தி இன்னும் தீர்ப்புகள்
வருகின்றன, அந்தத் தீர்ப்புகளும் அவர்களின் பதவி ஓய்வு பெறும் நாளன்று வருவதுதான்
வேடிக்கை. முற்போக்காய்த் தெரியும் நீதியரசர்கள் கூட இத்தகைய மூட நம்பிக்கைகளைப்
பாதி சாடுவதும் மீதியில் தாங்களே வழுக்கி விழுவதுமாக உள்ளனர்.
இத்தகைய
நாட்டில் இந்தச் சமூகப் பிரச்னைகளை சொந்தப் பணத்தில் நேர்மையாய் தனது
இலக்கிலிருந்து வழுவாமல், பிரச்சார நெடியின்றி சிறந்த கலை வடிவத்தில் நமக்குக்
கொடுத்த சங்ககிரி ராச் குமார் நம் பாராட்டுதலுக்குரியவர். அவர் தனது துறையில்
மேலும் மேலும் வெற்றியடைய வேண்டும். அது தமிழர் தம் அல்லது இயக்குனரின் வரிகளில்
திராவிட இனத்தின் தன்மானப் படைப்புகளாய்த் திகழும் என்பது நமது பேராசை. இந்தப்
படத்தினை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கருதிய சேரன்
அவர்களும், பிற இளைய இயக்குனர்களும் பல புதிய படைப்பாளிகளுக்கு கலங்கரை விளக்கமாகத்
திகழ வேண்டும், இது போன்ற படைப்பாளிகளை உயர்த்தி வைக்க வேண்டும்.
திராவிட
இயக்கங்கள் என்ன செய்து விட்டன என இன்றும் கொச்சைப்படுத்தும் நபர்களுக்குச்
சாட்டையடியாய் வந்துள்ள சிறந்த படைப்பு, தந்தை பெரியார் முழங்கிய சொல்
'வெங்காயம்'. தலைவர்களின் கவனத்துக்கு..இது போல் வருடத்திற்கு இரண்டு படங்களாவது
வந்தால் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த இயக்கங்கள் ஆற்றிய பணி புரியும், இந்த
சமுதாயங்களின் முன்னேற்றத்திற்குப் பணியாற்றியவர்கள், இயக்கங்கள் யார் அதனை ஓயாது
எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள் அவர்களின் இயக்கங்கள் எவை அது எவற்றின் பெயரால்
நடைபெறுகின்றது என்ற தெளிவு கிடைக்கும். அந்தக் கலை மொழி கைவந்த நபர்களை ஆதரித்து
அந்தச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
அதற்கு ஆவன செய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும்.
இதில் ஈடுபட்ட அனைவரையும்
எவ்வளவு பாராட்டினாலும் தகும். மண் சார்ந்த படைப்புகள், இந்த மக்களுக்கான
படைப்புகளை நாமும் வரவேற்போம்..அந்தப் படைப்பாளிகளை அரவணைப்போம்.அது வருங்கால
சந்ததிக்கு நம் எண்ணங்களைச் சுமந்து செல்லும் என்பதால்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக