செவ்வாய், ஜூன் 26, 2012


வானத்தை எட்டிப் பிடித்த .. வழக்கு எண் 18/9

ரெ கா பால முருகன்

இயல்பான கதை. கதைக்குப் பொருந்திய நடிகர்கள். இந்தியாவின் இரு வேறுபட்ட சமூகச் சூழல்களில் வாழ்வைத் தேடுபவர்களும், வசதியால் மற்றவர்களின் வாழ்வைக் கேள்விக் குறியாக்கும் பருவ வயதுக் குழந்தைகளின் உணர்வுக் குழப்பங்களை ஆபாசமின்றி அதே சமயம் இளந்தலைமுறை உணரும் வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். கல்லூரியில் மனம் பதைக்கும் தர்மபுரி சம்பவத்தைப் படமாக்கியவர். காதல் இயக்குனரின் படம் என்பதைவிடவும் கல்லூரி இயக்குனரின் படம் என்று கூறலாம். ஒரு வித்தியாசம் என்னவென்றால், கல்லூரியில் படம் முழுவதுமே ஒரு சோகம் இழையோடுவதை ஆரம்பம் முதல் உணர இயலும் இதில் அதனைத் தவிர்க்கும் கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் இயக்குனர் என உறுதியாகக் கூறலாம்.


வசதி வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றங்கள், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கங்கள் அதில் சிக்கித் திணரும் குழந்தையுள்ளங்கள். வாழ்வின் திருப்புமுனைச் சந்தியில் இதன் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்பதை உணர்த்திச் செல்கின்றது. நாம் நாளும் கண் முன்னே சந்திக்கும் சம்பவங்களை கொண்டு வெளி வந்த படம்.எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் என பல வசதிகளால் தறி கெட்டு அலையும் இளைய தலைமுறைக்கான பாடம். வசதிகளால் தங்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் அவர்களின் குற்றச் செயல்களைத் தங்களின் பணபலத்தால் வெல்வதும் அதற்கு அப்பாவிகள் பலிகடாவாக்கப்படுவதும் மிகவும் இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது. அரசியலும்,அதிகாரமும், பணபலமும் கைகோர்க்கும் பொழுதில் வாழ்வைத் தேடியலையும் ஒரு சின்னஞ் சிறு வெள்ளந்தியான கிராமத்துச் சிறுவனின், நடைபாதைவாசியின் கனவு கலைந்து போவதுதான் கதை.



அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பெண்ணின் மீது அமிலம் ஊற்றப்பட அதன் பிண்ணனியாய் விரிகின்றது கதை. குடியிருப்பில் பணிபுரியும் பெண் ஜோதியின் மீது திராவகம் வீசப்படுகின்றது.சந்தேகத்தின் பேரில் நடைபாதையோர கடையில் பணி புரியும் வேலு எனும் சிறுவன் விசாரிக்கப்படுகின்றான். இந்தப் பிண்ணனியில் விரியும் கதை விளை நிலங்கள் மனைகளாக்கப்படுவதனால் வேலையிழக்கும் கிராம மக்கள். வறுமையின் காரணமாய் வட இந்தியாவிற்கு வேலைக்குச் செல்லும் சிறுவன், அவன் பெற்றோரின் இறப்பு மறைக்கப்பட்டது புரிந்து அந்த முதலாளியை அடித்து விட்டு தப்பி சென்னை வந்து பாதையோரம் மயங்கிக் கிடக்க, அவனைக் கண்டு விபச்சாரப் பெண்ணொருத்தி சாப்பாடு வாங்கிக் கொடுத்து அவனுக்கு அந்தத் தெருவோர உணவுக் கடையில் ( இதனை இன்னும் ரிலையன்சோ, டாடாவோ தொடவில்லை..கூடிய விரைவில் இதனையும் அவர்கள் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது..) வேலைக்குச் சேர்த்து விடுவதாகத் தொடர்கின்றது. வேலுவுக்கும், ஜோதிக்குமான சிறு சிறு முரண்பாடுகள். அதுவே ஒரு தலைக் காதலாய் அவன் மனதில். இதனிடையில் வேலு வேலை செய்யும் கடையில் வேலை செய்ய வரும் கூத்துக் காரச் சிறுவன் சின்னசாமி. செத்துக் கொண்டிருக்கும் கலைகளின் பின்னே பல வயிறுகள் காய்வதனை இயல்பாய்ச் சொல்லி வயிற்றுப் பாட்டுக்குத் தொழில் கற்க வந்ததைக் கூறுவது அருமை.



வேலைக்காரப் பெண் பணிபுரியும் குடியிருப்பிலுள்ள மாணவி ஆர்த்தி விசாரணை அதிகாரியைச் சந்தித்து அவரிடம் இன்னொருவனை விசாரிக்கக் கோரிக்கை வைக்கிறாள் அந்த இன்னொருவனுக்கும் ஆர்த்திக்குமான சம்பவக் கோவைகள் வசதியும், தொழில் நுட்பமும் பள்ளி மாணவர்களைப் பாடாய்ப் படுத்துவதனையும், வக்கிரம் வளர்ப்பதையும் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றது வழக்கு எண். பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் அவர்களின் குழந்தைகளின் தனிமையும் அதனை இந்த வக்கிரப் புத்தியுள்ள சிலர் உபயோகப்படுத்திக் கொள்ளும் காட்சிகளும் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. இது டேட்டிங் கலாச்சாரம் என்பதால், பெற்றோரின் அரவணைப்பற்ற ஆர்த்தி அந்த பள்ளி மாணவனின் பொய்யான வார்த்தைகளில், அவளின் கைபேசி மோகத்தில் மயங்கும் நிலையில் அவளைத் தன் வயப்படுத்த சில தருணங்களை உருவாக்குகின்றான். ஆர்த்தி அவனது பிறந்த நாளுக்கு அப்பாவின் கண்டிப்பு காரணமாகச் செல்ல இயலாமல் போகின்றது. அதனால், அவன் அழைத்தவுடன் பெற்றோருக்குத் தெரியாமல் அவனுடன் கடற்கரைக்கு (ECR) செல்வதும் அவளை அவன் தனது கைபேசியில் படமெடுப்பதும் நிகழ்கின்றது. எதிர்பாராத நிலையில் ஆர்த்தி அவனது கைபேசியிலுள்ள தனது படங்களைக் கண்டு அதிர்ந்து அவையனைத்தையும் அழித்து விடுகிறாள். தன் எண்ணம் நிறைவேறாத அவன் இந்தத் திராவக் வீச்சை செய்திருக்கலாம், அது குறி தவறிய திராவக வீச்சு என்பது அவள் கோணம்.



விசாரணை அதிகாரி குமாரவேல் தன்னுடைய இயல்பான நடிப்பால் தனது பாத்திரத்திற்குச் சிறப்புச் சேர்த்துள்ளார் என்றே கூற வேண்டும்.அந்த வசதியான வாலிபனின் தாய் ஜெயலட்சுமி, அரசியல்வாதி என அனைவரின் நடிப்பும் அவர்களுக்கான சரியான முக்கியத்துவமும் திரைக் கதையினைத் தொய்வில்லாது கொண்டு செல்கின்றது. விசாரணை அதிகாரியின் தந்திரமான நடிப்பால் அந்த அப்பாவி வெள்ளந்தி இளைஞன் வேலு பலிகடாவாக்கப்படும் கொடுமை. அதனையறிந்த சிறுவன் சின்னசாமியால் முழு விபரங்களும் தெரிய வந்த ஜோதி என்ன செய்கிறாள். வேலுவின் மீதான வழக்கு எண் 18/9 என்னவாகின்றது? வேலு விடுதலையானானா? காவலதிகாரி உட்பட குற்றவாளிகள் என்னவானார்கள்? தண்டிக்கப்பட்டார்களா? இல்லையா? என்பதனைத் தொய்வின்றி கொண்டு செல்கின்றார் இயக்குனர். விஜய் மில்டன் அவர்களின் காமிரா நாமே நேரடியாக நிகழ்வுகளைக் காணும் வண்ணம் நேர்த்தியாய் உள்ளது. ஒரு குரல் கேட்குது பெண்ணே பாடல் அருமை. 



ஒரு ஆசிரியரின் மகன், ஒரு பொதுவுடைமைச் சித்தாந்தத்தினைக் கொள்கையாகக் கொண்ட தந்தையின் வளர்ப்பாய் தனது படைப்புக்கு நியாயம் செய்துள்ளார். பல இடங்களில் காட்சிகள் குறிப்பால் உணர்த்திச் செல்வது கூர்ந்து கவனித்தால் புரியும். பள்ளி மணியடிக்கும் நிலையில் ஏக்கத்துடன் வேலு வட இந்தியா செல்வது, ஜோதியின் தாய் தந்தையர் பற்றி அவளை வளர்க்கும் பெண் சொல்வது, ஜோதியே கடைசியில் தங்கள் தந்தை தங்களைத் துணிவுடன் வளர்த்தாதகக் கூறுவது என பல காட்சிகள் உணர்வு பூர்வமாய் வந்துள்ளது. இது போன்ற திரைப்படங்கள்தான் நமது சமுதாயச் சீரழிவுக்கு மருந்தாய், எச்சரிக்கை மணியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 



வானத்தையே எட்டிப் புடிப்பேன் என்ற பாடல் இந்தப் படத்தின் குறியீடாகப் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. உண்மைதான் இந்தக் குழுவானது வானத்தை எட்டிப் பிடித்துவிட்டது என்று தாராளமாகக் கூறலாம்.

வாய்ஸ் ஆப் ஓபிசி ஜூன் மாத இதழில் வெளி வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக