சனி, ஜூன் 05, 2010


சாதிவாரிக் கணக்கெடுப்பும் - நமது மாண்புமிகு அரசியல்வாதிகளும்........

இந்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி மக்கள் தொகையை கணக்கிடுவதா? வேண்டாமா ? என்பதற்கு பலதரப்பட்ட விளக்கங்களை மேட்டுக்குடி அறிஞர் பெருமக்களும், மேன்மை தங்கிய சில பத்திரிக்கைகளும், அழையா விருந்தாளிகளாக பிக் பி என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் போன்றவர்களும் தங்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.

அரசின் நலத் திட்ட்டங்கள், இட ஒதுக்கீடு போன்ற மக்களை சமூக ரீதியாக சமப்படுத்த அரசு எடுத்திடும் பல்வேறு நடவடிக்கைகள் சரியானபடி திட்டமிடப்படவும் தகுந்த நபர்களைச் சென்றடையவும் வேண்டுமென்றால் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தத் தகவல்கள் எடுக்கப்படுவதே சரியானதாகயிருக்க முடியும்.உச்ச நீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும் போதெல்லாம் இந்த எண்ணிக்கை பற்றிக் கேட்பதும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எப்போதும் அதற்கு 1931 கணக்கெடுப்பைக் காரணம் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. தேவைப்பட்டால் மத்திய அரசு கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கும் என்று ஒப்புதலும் கொடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசின் முடிவெடுக்கும் அதிகார பீடங்களில் இந்தக் கணக்கெடுப்புக்கு எதிராக ஒரு மாபெரும் சதித் திட்டமே நடைபெறுவது கண்கூடாக உள்ளது.இந்த முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகார மையங்களில் தாங்கள் சார்ந்த சாதியின் மேலாண்மை பறிபோய்விடக் கூடும் என்ற அச்சத்தினாலேயே இதற்கு முட்டுக்கட்டை போட அதிகார வர்க்கம் முயல்கின்றது. அதற்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் அச்சு ஊடகங்களில் தங்கள் சாதிப் பெயருடன் எழுதிக் கொண்டு சாதிவாரிக் கணக்கீடு இந்தச் சமுதாயத்தை சாதிவாரியாகப் பிரித்துவிடும் என்று கூறுவதுடன் இதற்குத் துணையாக நமது நாட்டின் முன்னோர்கள் இதற்காகவே சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்தனர் என்று கூறுவதுதான் விந்தையிலும் விந்தையாக உள்ளது. ரெட்டிகளோ, நாயுடுகளோ,அய்யர்களோ,அய்யங்கார்களோ,நாயக்கர்களோ, நாயக் களோ இன்னபிற மூவாயிரம் ஜாதிப் பிரிவினர்களோ தங்கள் வம்சாவழியை பாதுகாக்க அந்தச் சாதிகளிலேயே சம்பந்தம் பண்ணுவதை சரியென்று கூறிக் கொண்டு சாதி வாரிக் கணக்கெடுப்பை மட்டும் எதிர்ப்பது ஒரு கேவலமான மட்டமான தந்திரம்தானேயொழிய உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணத்திலல்ல.சமுதாயம் சாதிகளால் பிரிந்து கிடக்கின்றது என்பதுதான் உண்மை. இந்த அநீதியை சரி செய்யக்கூடிய வல்லமையுள்ள தலைவர்கள் யாரும் இன்று கிடையாது. இது பிற்படுத்தப்பட்டவர்களோ தாழ்த்தப்பட்டவர்களோ தங்கள் மீது திணித்துக் கொண்ட பிரிவல்ல. இந்தச் சமுதாயம் அவர்களை பன்னெடுங்காலமாக பல் வேறு படித்தரங்களில் நிறுத்தி அவமானப்படுத்தியுள்ளது,

தான் வில் வித்தை கற்றுத் தராத ஏகலைவனின் விரலை தனது சிலையைக் குருவாகப் பாவித்து கற்றுக்கொண்ட காரணத்திற்காக அவன் பெரு விரலைக் காணிக்கையாகப் பறித்தது இந்தச் சமுதாயம்தானே.தனது மோட்சத்திற்காகத் தவமியற்றிய சம்பூகனின் தலையை இந்தச் சமுதாயத்தில் தவமியற்றும் உரிமை சூத்திரனுக்கில்லை அதனால்தான் எனது மகன் இறந்து விட்டான் என்று கூறிய அந்தணனின் வாக்கினை ஏற்றுத்தானே தசரத ராஜகுமாரன் கருணையே வடிவான ராமன் கொய்தான். நந்தனை உள்ளே அழைக்க தெய்வத்தாலும் இயலவில்லை என்பதால்தானே அந்த ஆற்றலற்ற தெய்வமானது நந்தியை 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என விலகச் சொன்னது.இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பில் நந்திகளை விலகச் சொல்லுமளவிற்குக் கூட எந்தத் தெய்வத்திற்கும் மனம் வரவில்லையே அதுதான் கொடுமை. தீயில் புண்பட்டு இறந்த நந்தனை பொன்னார் மேனியனாய் சிவலோகப் பதவியடைய வைத்த சமுதாயம்தானே.

இன்னும் கூட ராகுல் காந்தியால் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குச் செல்ல முடிகின்றதேயொழிய அவர்களை சமுதாயத்தின் மையப் புள்ளியாக மாற்ற இயலவில்லை என்பதுதான் இந்தச் சமூகத்தின் கோரமான முகம்.இந்தச் சூழ் நிலையில் நமது இருபதாம் நூற்றாண்டில் இவையெல்லாம் இல்லை என்று கூற சாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்களால் இயலுமா?? எதிர்ப்பவர்கள் தங்களின் பெயரின் பின்னாலுள்ள சாதிப் பெயரைக் கைவிடக்கூட இயலாதவர்கள்.

ஆனந்த் சர்மா என்று இன்னும் சாதிப் பெயரை அலங்காரமாக கைவிடாத மத்திய அமைச்சர் ஏதோ கணக்கெடுப்பினால் இந்தியா இனிமேல்தான் சாதிவாரியாகப் பிரியும் என்பது போல் பேசுவதுதான் விந்தையாக உள்ளது. உழைக்கும் மக்களுக்கான அரசியல் இயக்கம் என கூறிக் கொள்ளும் நமது மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி தங்களது கட்சி ஏன் பலமிழந்து வருகின்றது என்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணராது உள்ளது.இன்னும் சாதீயம் சார்ந்த இந்திய நிலையினை மறுதலித்து வருவது அதனை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். இந்தியாவில் உழைக்கும் மக்கள் யாரென்றால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாகத்தான் இருக்க முடியும் என்பதை உணர மறுப்பது தலைவர்கள் அல்லது அதன் மத்தியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இந்தச் சமுதாயங்களைச் சாராத முற்பட்ட இனமாயிருப்பதனால்தானே. அதனால்தான் பாராளுமன்றத்திலும் சரி அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் சரி அவர்களின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஒரு வேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புரோகிதம் எனும் தொழில்தான் மிகுந்த உடலுழைப்பைக் கோருவது என்பதால் அந்தத் தொழில் செய்பவர்கள்தான் உழைக்கும் மக்கள் என்ற எண்ணம் இன்னும் கலையாது உள்ளதோ என்னவோ? இதை அவர்கள் பொலிட் பீரோதான் முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்கள் தாங்களாகத் தரும் விவரங்கள் என்பதனால் அது உண்மையான கணக்கெடுப்புக்கு வழி வகுக்காது என்று கூறுகின்றார்.வாதத்திற்காக அதைச் சரியென்று எடுத்துக் கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய எண்ணிக்கைக்கு இதுவரையில் அவர் குரலெழுப்பாதது ஏன்? மேலும் தாங்களாகக் கூறுவதாலேயே யாரும் பிற்படுத்தப்பட்டவர்களாகி விட முடியாது என்பதையும் அதன் காரணமாக அதற்கான சலுகைக்கு அவர்கள் உகந்தவர்களாகி விட மாட்டார்கள் என்பதும் புரியாமலா பேசுகின்றார். ஒருவேளை எண்ணிக்கை குறைவாக வந்து விடும் என்று உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்கள் மேலுள்ள அக்கறையால் அவர் அச்சப்படுகின்றாரோ ? என்னவோ? மக்கள் தானாக முன்வந்து தராவிட்டால் அவர்களுக்கு அபராதம் தீட்ட அரசு திட்டமிடுகின்றதென்பதை சீத்தாராம் யெச்சூரி கண்டிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்று அங்கலாய்க்கும் திரு பிரகாஷ் காரத் இன்னும் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிக் கூறத் தயங்குவதும், திருமதி பிருந்தா காரத் அவர்கள் உள் ஒதுக்கீடின்றி பெண்கள் இட ஒதுக்கீடு தற்போது உள்ள நிலையிலேயே சட்டமாக்கப்படவேண்டும் என்றும் கூறுவது பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை முழுமையாக்கும் என்பதால்தானோ என்னவோ?

இவர்களெல்லாம் மண்டல் குழு அறிக்கையின் பயனாக இன்று மத்திய அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடி விடும் என அச்சப்படுவதால்தான் இன்றுவரை அது குறித்து எந்த அக்கறையும் காட்டாது உள்ளனர். இது குறித்து மத்திய அரசிடம் இன்று வரை வெள்ளை அறிக்கை கேட்டதுண்டா? இந்தப் பாட்டாளிகளுக்காக அவதாரமெடுத்த கட்சி? இன்றுவரை பெரும்பான்மைச் சமுதாயமான பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரமுள்ள பதவிகளில் சொற்ப சதவீதவீதத்திலேயே உள்ளனர் அதாவது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை விடவும் பின் தங்கியுள்ளனர் என்பதை எங்காவது பேசியோ கேள்வி கேட்டோ உள்ளனரா?

இந்தியாவின் நவீன வேளாண் அமைச்சர், உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வழி வகுத்தவர் என்றெல்லாம் பேசப்படும் சி சுப்பிரமணியம் அவர்கள் தனது தொகுதியாக ஏன் பழனி நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்தார் என்றால் அது முருகனின் திருத்தலம் என்பதாலல்ல அங்கு அவரின் இன மக்கள் அதிகமாக இருப்பதால்தான்.

படித்தால் , பதவிகளில் அமர்ந்து விட்டால் சாதிகள் அழிந்து விடும் என்பது உண்மையானால் படித்த வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் நிற்க வேண்டும். அங்குள்ள மக்கள் சாதி என்பதையே எண்ணாது மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு வாக்களிப்பார்கள்தானே. ஏனென்றால் அங்கு சாதி முக்கியமாயிருக்காதல்லவா?? படித்த உயர்ந்த அந்த மக்கள் திறமையாளர்களைத்தானே தேர்ந்தெடுப்பார்கள்.

தென் சென்னைத் தொகுதியில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் எனப் பெயர் பெற்ற திரு இரா செழியன் அவர்கள் நின்ற போதில் அந்த படித்த நபர்கள் அதிகம் வாழும் தொகுதி உறுப்பினர்கள் அவரை குறைந்த பட்ச வாக்குகள் வித்தியாசத்தில் கூட தேர்ந்தெடுக்க மறுத்தது சாதியன்றி வேறொன்றுமில்லை. அதை அவர் வேண்டுமானால் மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். உண்மை பட்டவர்த்தனமானது. இவர்களெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுப்பதனால் இவர்களுக்கு தென் சென்னையில் அதிக வாக்குகள் விழ வேண்டுமல்லவா? உண்மை அதுவல்ல.

வளர்ந்து விட்டவர்களையும் வசதி படைத்தவர்களையும் தங்களது ஆளுமைக்குள் கொள்வினை கொடுப்பினை மூலம் கொண்டு வந்து விட்ட வளர்ந்த சமுதாயத்தின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இவர்கள் மாறியிருக்கலாம். ஆனால் அந்தச் சமுதாயங்கள் இவர்களை இவர்களின் பதவியும் பணமும் இருக்கும் வரைதான் தங்களவர்களாய் ஏற்றுக் கொண்டது போல் நடிக்கும். பதவியிழந்த மறு நிமிடம் இவர்கள் எந்தத் தெருவுக்குள் சொந்தம் கொண்டாட முடியும். அப்படியான நிலை வந்தால் உடனே இவர்களெல்லாம் ' நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களில் ஒருவன், நமது இனத்தை உயர்த்திப் பிடிக்க எனக்கு வாக்களியுங்கள்' என்று பொய்யாய் பேசுவதைக் கேட்டு கண்ணீர் மல்க நமது வாக்குகளை நாம் இவர்களுக்குத் தரத் தயாராயிருப்பதால்தானே இவர்கள் இந்தத் தில்லு முல்லுளை அரங்கேற்றுகின்றனர்.

சனி, ஏப்ரல் 17, 2010


தலைதூக்கும் வர்ணாஸ்ரமமும் தாங்கிப் பிடிக்கும் அச்சு ஊடகங்களும்


அண்ணாச்சியைச் சொல்லுங்கள் ... அவாள்களைச் சொல்லாதீர்கள் - டெக்கான் க்ரானிகிளின் அங்காடித் தெரு திரைப்பட விமர்சனம்.

பெரு நகரங்களில் தொலைந்து போன சிறு நெஞ்சங்களின் அவலத்தை வெள்ளித் திரையின் வழக்கமான அரிதாரப் பூச்சுகளின்றி சொல்லிய முக்கியமானதொரு திரைப்படம் அங்காடித் தெரு. இதற்கான பல விமர்சனங்கள் அதன் சிறப்பைக் கூறிச் சென்ற போதிலும் கடந்த 04.04.2010 அன்று இது குறித்த தனது விமர்சனத்தை டெக்கான் நாளிதழ் வெளியிட்டது. அதில் அந்தப் படம் பற்றிய விமர்சனத்தின் முடிவில் அதை விமர்சித்திருந்த திரு A S அவர்கள் படத்தில் அந்த தங்கை பாத்திரம் தேவையற்றது என்று கூறியதுடன் அந்த பிராமணக் குடும்பம் பற்றிய காட்சி வலிந்து புகுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது அவரின் தனிப்பட்ட கருத்தாகவோ அல்லது அந்தப் பத்திரிக்கையின் கருத்து எனவோ எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் பலர் விமர்சிக்க ஆரம்பித்தவுடன் அது அதை எழுதியவரின் தனிப்பட்ட கருத்து என்பதாக முடிகின்றது.

அதாவது ஒரு திரைப்படத்தில் ஓரிடத்தில் வரும் ஒரே ஒரு காட்சிக்கு அவர் இப்படித் துடித்துப் போகிறார் என்றால் முழுப்படமும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களைக் குறிப்பிட்டு எடுக்கப்பட்டதற்கு அந்தச் சமுதாய மக்கள் துடிக்க மாட்டார்களா?

அவர் அதை சாதாரணமாகக் கூறாமல் பிராமணக் குடும்பம் என்று கூறியது உள் நோக்கமுடையதாகத்தானே தோன்றுகின்றது?

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதுதானே உண்மையாயிருக்க இயலும்.

அதாவது நீங்கள் எந்த சமுதாயத்தைப் பற்றி வேண்டுமானாலும் படம் எடுங்கள், அவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள் அது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை என நாங்கள் வாதாடி வெற்றி பெற்றுத் தரத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவாள்களைப் பற்றி மட்டும் தவறாகக் கூறாதீர்கள் என்ற தொனியில் ஒருவர் எழுதுவதும் அதனை பிரபல நாளிதழ் சரியென்று உணர்வதாலோ அல்லது தங்கள் பத்திரிக்கையின் பெரும்பாலான வாசகர்கள் அவாள்கள்தான் என்பதாலோ வெளியிடுகின்றன.

நாம் அண்ணாச்சிகளுக்காகவோ, அவாள்களுக்காகவோ வாதிடவில்லை, தொழிற் பெருக்கத்தில் மனித மனம் மிருகமாகி தனது சுய நலத்திற்கு எதையும் யாரையும் பழி கொடுக்கும் சூழல் இருப்பதை நமது மக்கள் உணர்ந்திருப்பதாலேயே அங்காடித் தெரு போன்ற படங்கள் வெற்றி பெருகின்றன. ஆனாலும் அதிலும் தங்கள்??? சமுதாயத்தைப் பாதுகாக்க முனையும் நபர்களையும் அதைப் பிரசுரிக்கத் தயங்காத பத்திரிக்கைகளையும் நாம் என்ன செய்யப் போகின்றோம். பல காலங்கள் முன்பாக மு வரதராசனார் அவர்கள் சொன்னது போல் அவற்றை நிராகரிக்கும் எண்ணம் நம்முள் எத்தனை பேருக்கு உள்ளது? அந்தப் பத்திரிக்கையை விநியோகிக்க மறுக்கக் கூடிய பிற சமூக விநியோகிப்பாளர்கள் எத்தனை பேர்?

இவற்றை நாம் செய்ய மாட்டோம் என்ற காரணத்தினால்தானே அவர்கள் இன்று நமது தமிழ் மண்ணில் தங்கள் மனம் போன போக்கில் எழுதிக் கொண்டும் பரப்பிக் கொண்டும் திரியும் சூழல் உள்ளது. இதில் வேடிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால் எண்பதுகளின் இறுதியில் திரு பாரதிராஜா அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கிடையில் "வேதம் புதிது" என்று பெயர் வைத்தவுடனேயே பற்றிக்கொண்டது நெருப்பு, மாண்பமை தணிக்கைத்துறையின் மூலமாக அந்தப் படம் வெளி வரத் தடை போட அவர்களால் முடியும் , முடிந்தது என்பதுதான் வரலாறு. அன்றைய முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் மத்திய தணிக்கைத் துறை மூலமாக அந்தப் படம் வெளிவர பாரதிராஜாவே படாத பாடு பட வேண்டியிருந்தது. அன்றைய முதல்வரும் கூட அதற்கு வக்காலத்தாக மூதறிஞர் ராஜாஜி இருந்திருந்தால் அந்தப் படத்தைப் பாராட்டியிருப்பார் என்று குறிப்பிட்டதாக நினைவு.பாரதி ராஜா என்பதால் முதல்வர் தலையிட்டு படம் வெளிவந்தது. அதுவே ஒரு சாதாரண இயக்குனராகவோ, புதுமுக இயக்குனராகவோ இருந்திருந்தால் அவர் இன்னேரம் காணாது போயிருப்பார்.

கருத்தம்மாவில் கள்ளிப்பாலை உபயோகித்துப் பெண் குழந்தைகளை அழிக்க நினைக்கும் சமூகமாகத் தங்களைக் காட்டும் போதிலோ, பல படங்களில் தங்களை வன்முறையாளர்களாக அல்லது அரிவாளால் நியாயம் பேசும்சமூகமாகக் காட்டும்போதோ அந்தச் சமுதாயம் தங்களைப்பற்றிய விமர்சனம் என்று கொதிக்கவில்லை, கொள்ளைப்புற வழியாகத் தடைகளையிடவில்லை .. இன்றும் அண்ணாச்சிகளின் சமுதாயம் தங்கள் சமுதாய செல்வந்தர்களின் மீதான தாக்குதல் என்று அதை எடுத்துக் கொள்ளவில்லை.. எந்தப் போராட்டத்திலும் குதிக்கவில்லை.. தமிழகத்தில் அவர்கள் இல்லாத ஊர்களே இல்லாத நிலையில் அப்படியொரு போராட்டம் அவர்களுக்கு பெரிய காரியமல்ல எனும் நிலையில் அவர்கள் அமைதியாயிருப்பது அந்தச் சமுதாத்தின் பெருந்தன்மை.

ஆனால் இப்படியெல்லாம் பெருந்தன்மையாய் பெரும்பான்மைச் சமூகங்கள் இருப்பதால்தான் சிறுபான்மைச் சமுதாயம் ஆட்டமாய் ஆடுவதும் அவர்களின் கருத்துக்களை அவர்கள் சார்ந்த அச்சு ஊடகங்கள் சிரமேற்கொண்டு பரப்புவதும் தொடர்கின்றது. நமது எதிர்வினையற்ற தன்மையால்தான் இவர்கள் இன்னும் பெரும்பான்மை மக்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

இந்தக் கட்டுரை முதன் முதலில் கீற்று வலைத்தளத்தில் கடந்த ஏப்ரல் 17 அன்று வெளியிடப்பட்டது.

சனி, மார்ச் 27, 2010















இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - யானை ராஜேந்திரனின் நீதிமன்ற வழக்கு தொடர்பாக ...

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தேசீயக் கட்சிகள்தான் போட்டியிட வேண்டுமென்று ஒரு சமூக நல ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.அதற்குக் காரணமாக அவர் மாநிலக் கட்சிகள் பாராளுமன்றத்தை நடைபெறவிடாமல் தடுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றார். இது மேம்போக்காகப் பார்த்தோமேயானால் மிகவும் சிறந்த முயற்சியாகத் தோன்றும். நமது பத்திரிக்கைகளும் அதை ஒரு சிறந்த முயற்சியாகத் தாங்கிப் பிடிக்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது.

நமது தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் நபர்கள் பலவித கட்சிகள் சார்ந்த / கட்சி சாராத பலதரப்பட்ட வேட்பாளர்களாகப் போட்டியிடும் காலத்திலேயே தங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற 49(o) படிவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சூழ்நிலையில் இரு கட்சிகள் மட்டும் போட்டியிடவேண்டும் என்ற வாதம் எப்படிச் சரியானதாயிருக்க முடியும்?

மக்கள் பிரதிநிதிகள்தான் பாராளுமன்றத்தின் நோக்கமே தவிர, அத்தகையவர்களை அவர்களின் செயல்பாடுகள், கொள்கைகளைக் கொண்டு கட்சி சார்ந்தவர்களையோ, கட்சி சாராதவர்களையோ தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு??

மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னணியையும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியின் காரணங்களையும் புரியாமல் எழுப்பப்படும் வாதம்தான் இந்த இரு கட்சி ஆட்சிமுறை. மாநிலக் கட்சிகள் தங்கள் பகுதி மக்களுக்காக மத்தியில் அழுத்தம் தரக் கூடாதென்றால் மக்களாட்சியெனும் தத்துவமே தேவையற்றதாகி விடாதா?

சென்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அதிகமான நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியது பாரதீய ஜனதாக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். குறிப்பாக பாரதீய ஜனதாதான். அதனால் பாரதீய ஜனதாக் கட்சியை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஆணையிட முடியுமா? அல்லது நீதியாணைதான் பெற முடியுமா??

ஒரு புறம் அதிகாரப் பகிர்வு என்று கூறி மாநில அரசின் அதிகாரங்களை மாநகராட்சி,நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்வழங்க வேண்டி பரவலாக்குவதும் மற்றொருபுரம் மத்திய அரசு நினைத்தால் எதையும் மாற்ற இயலுமாறு அதிகார குவிப்புக்கு வித்திடுவதாகவும்தான் இத்தகைய முயற்சிகள் அமையும்.

இன்று உலக மயமாக்கலில் நுகர்வுக் கலாச்சாரத்தில் பலவிதங்களிலும் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ள போது பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் பலமுனைப் போட்டிகள் கூடாது என்பது என்ன நியாயம்??

மற்றுமொரு முறையில் சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவர் இந்த முறையை ஏன் பாராளுமன்றத்திற்கு மட்டும் தேவை என நினைக்கின்றார். மிகவும் நேர்மையான முறையில் சிந்த்துப் பார்த்தோமேயானால் ஒரு காலத்தில் கேரள சட்டமன்றப் பெரும்பான்மையானது சில சுயேட்சை அல்லது சிறு கட்சிகளின் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டில் ஊசலாடியது. அத்தகைய நிலையானது நமது தேர்ந்த வாக்காளர்களால்தான் நிராகரிக்கப்பட்டதேயன்றி எந்தவொரு நீதிமன்றத் தலையீடுகளாலோ அல்லது சட்டத்தின் மூலமாகவோ அல்ல என்பதை நாம் இன்று நினைத்துப் பார்த்திட வேண்டும்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவமானது அந்தக் கொள்கையில் பிடிப்புள்ள கட்சிகளால் நிறைவேற்றப்பட்டதோ, இல்லையோ இன்று நமது மக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே அது தேவையில்லையென்றாலும் அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஒரு சில நீதிபதிகள் கோடிக்கணக்கான மக்களின் மீது இந்த இருவரில் ஒருவருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிடுவதாக அமையக் கூடாது.

தத்தெடுக்க வந்த நபரிடம் தனது குழந்தைகளிலேயே நல்ல குழந்தை, எதிர் வீட்டுக் கூரையில் தீயிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைதான் என்பது போல, இன்று சிறந்த கட்சி என்பது (மாநிலக் கட்சியோ, தேசியக் கட்சியோ) அந்தக் குழந்தை போன்றுதான் உள்ளது. இந்தச் சூழ் நிலையில் அந்தக் குழந்தையைப் போட்டியில் இருந்து நீக்கி விட்டால் அதை விடவும் அபாயகரமான கட்ச்சிக்குத்தான் நாம் வாக்களிக்க நேரிடும்.

மக்களுக்கான சட்டங்கள், மக்களின் ஆட்சி என்றால் அது மக்களின் நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்வதாய் மக்கள் பிரச்சனைகளில் ஈடுபாடுடையதாய், மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும். படிக்காதவனின் பிரச்சனைகளை படிக்காதவன் முழுமையாய்த் தெரிந்து கொள்ள முடியும், கண்ணில்லாதவன் துயரை என்னதான் நாம் உணர முடிந்தாலும் முழுமை என்பது அவன் உணர்வதுதான், அது குறித்து அவனை விடக் கருத்துச் சொல்ல கண்ணற்றவர் துயரை மிக உயரிய அளவில் நேசிக்கக் கூடிய மனிதரன்றி யாராலும் இயலாது. அத்தகைய பிறர் துயரை தன் துயராய் எண்ணி உணர்வோர் ஒரு சிலரே!! எனவே அவரவர் துயரை அவரவர், அவர் அருகாமையிலுள்ளோர்தான் கூறவோ உணரவோ இயலும். அந்த வகையில் பார்த்தோமேயானால் மாநில மக்களின் அருகாமையில் மாநிலக் கட்சிகள் இருந்ததாலேயே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். அவர்களை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்ட தேசியக் கட்சிகள் இந்த மாநிலக் கட்சிகளின் துணையின்றி எப்படி வாக்கு வாங்க முடியும். அப்படியொரு சூழ் நிலை உருவாகுமேயானல் அது வேறு வழியின்றி வற்புறுத்திப் பெறும் வாக்காகவே அமையும். மக்களின் தேவைகளை உணராத மத்திய அரசு எந்த வகையில் இந்த மக்களுக்கு சேவை செய்ய இயலும்.

அப்படியென்றால் இன்னொன்றையும் நாம் தெளிவு படுத்துக் கொள்ள வேண்டும், மாநில அதிகாரங்களை மத்திய அரசு பாதிக்காமல் இருக்க வேண்டும்,அந்தந்த மாநில மக்களுக்கான நலத் திட்டங்கள் போன்றவற்றை அந்தந்த மாநிலத்திடமே விட்டு விட வேண்டும். மாநில நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றங்களாக்கிட வேண்டும், தலைமை நீதிபதியென்பவர் அந்தந்த மா நிலம் நியமிப்பவராகத்தானே இருக்க இயலும்.எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை எடுத்துக் காட்டும் நம்மவர்கள் அங்கு இருக்கும் அதிகாரப் பகிர்வுகள் பற்றியோ, சட்டபூர்வமாக கருப்பின மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியோ ஏன் அதிகம் எழுதுவதில்லை.

மேலும் நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது போல் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இரு அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு என்பது பல்வேறு விதமான நடைமுறைச் சிக்கல்களில் செல்லும் அபாயமும் உள்ளது. இரு தேசீயக் கட்சிகளும் இணைந்து தங்கள் அதிகாரத்தை அனைத்து மாநில அரசின் மீதும் செலுத்தக் கூடிய அபாயமும் அதைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெகு எளிதாக நிறைவேற்றி விட்டு, மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியதிகாரம் பெற்றுள்ள சில மாநில அரசுகளின் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சி செய்யாமலிருக்கும் என்பது என்ன நிச்சயம்??

இன்று வரையறை செய்யப்பட்ட கல்வி, விவசாயம் போன்றவற்றிலேயே கருத்து முரண்பாடுகள் வரும் போதில், இத்தகைய அதிகாரக் குவிப்பு என்ன நல்லதைச் செய்து விட முடியும்? பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவைப் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் ஒன்று கூடி நிறைவேற்ற முற்படுவதைப் பார்த்தோமேயானால் இந்த நடைமுறைச் சிக்கல் எளிதில் புரிய வரும். இதை சில பத்திரிக்கைகள் அந்தக் கட்சிகள் பெண்கள் மசோதாவில் அவர்களுக்குள்ள பிடிப்பாகக் கருதுவதுதான் இன்னும் கொடுமை.(தமிழக அரசியல் - 12.03.2010). அதாவது ஜாதிகளாலேயே வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அதனால் பெண்கள் இட ஒதுக்கீட்டின் படியும் உள் ஒதுக்கீடு இல்லாத நிலையிலும் கூட எப்படியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களே அதிகமாக இடம் பெறுவர் என கூறுகின்றனர்.கட்சிக் கொறடா உத்தரவுகளால் மனசாட்சியை அடகு வைத்துச் செயல்படும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களை இன்றைய பல கட்சி ஆட்சி முறைகளிலேயே நம்ப முடியாத நிலையில் இருகட்சி ஆட்சியில் எவ்விதம் முடியும்??

நமது ஜன நாயகம் பற்றித் தெரிந்தும் இவர்கள் இதை கூறுவதுதான் வேடிக்கை. கட்சி அரசியலில் கட்சித் தலைவர்கள் பார்த்து நிறுத்தும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறும் சூழலில், நமது யானை ராஜேந்திரன் அவர்கள் கூறுவது போல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் மட்டும் போட்டியிடும் பட்சத்தில் என்ன நடக்கும். உலகிற்கு நமது கொடையாகக் கொடுத்த வர்ணப் பிரிவுகளை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இதுவரையில் தெளிவாக எடுக்கப்படாத சூழ் நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு குரல் கொடுக்க மறுப்பதும் பின் அதையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பயன்படுத்துவதும் இந்த இரு கட்சிகளுக்கும் இன்றுவரை விளங்காததாயிருப்பதும், இன்றும் நீதியரசர்களுக்குக் கூட விளங்காமல் கிடக்கும் நிலையில் இது போன்ற இருகட்சி ஆட்சிமுறை யாருக்கு நலன் பயக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் அறியாத தேசீயக் கட்சிகள். சொல்லப்போனால் இந்த மக்களின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு அறியாத தேசீயக் கட்சிகள் அவர்களின் அருகாமையில் வர இயலாத போது இந்த மண்ணின் மக்களுக்கான கட்சிகளாய் அவை மாற இயலாத போது, மக்களை அந்தக் கட்சிகளுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என நிப்பந்திப்பது சர்வாதிகாரமன்றி வேறு அல்ல.

இறுதியாக எந்த மக்களாட்சியும், மக்களுக்காக , மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதாக இருக்கவேண்டுமேயன்றி நீதியாணைகளால் அமைக்க முடியாது. அதை அமைக்க முற்படுபவர்கள் மக்களாட்சியில் நம்பிக்கையற்ற பெரும்பான்மை மக்களின் மனதறியாதவர்களாகத்தான் இருப்பர்.

இந்தக் கட்டுரையானது 'கீற்று' வலைத்தளத்தில் முதலில் மார்ச் 2010-ல் வெளியிடப்பட்டது.

சனி, நவம்பர் 14, 2009


"பேராண்மை"யுடன் ஒரு திரைக்காவியம்

ரெ கா பால முருகன்

தங்கள் தயாரிப்பில் முற்றிலும் வணிக நோக்கோடு தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்த நிலையில், இயக்குனர் ஜனநாதன் மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் தீபாவளியன்று வெளி வந்த பேராண்மை பெரும் வெற்றிப் படமாகியுள்ளது என்று கூறியுள்ளார் ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

வழக்கமான நான்கு பாட்டு (அதில் ஒன்று குத்துப் பாட்டு என்பதை நாம் குறிப்பிடத் தேவையில்லை), ஐந்து சண்டை, கவர்ச்சிக் கன்னியரை விஞ்சும் கதா நாயகி, பழி வாங்கத் துடிக்கும் அப்பாவி நாயகன் இதனுடன் சில பல தொழில் நுட்ப சமாச்சாரங்கள் என்ற விஷயங்களை நம்பியே பல முண்னணி உள்ளூர் நாயகர்களும், உலக நாயகர்களும் அவர்கள் சொற்படி கேட்கும் மெகா மற்றும் மகா இயக்குனர்களும் நிறைந்து கிடக்கும் தமிழ் திரைப்படத் துறை. இதையெல்லாம் பார்த்து தங்களின் திறமையால் முன்னுக்கு வந்த இயக்குனர்களும் பேந்தப் பேந்த தங்கள் விழி பிதுங்கி ராஜேஷ் குமார் பாஷையில் "ஙே" என்று விழித்தபடியிருக்கும் நிலையில் தனது மூன்றாவது படத்தையும் தெளிவான சிந்தனைகளுடன் சமூகத்திற்கு பயன் தரத் தக்க வகையில் தனது கொள்கைகளுடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வெற்றிப் படமாக உருவாக்கியுள்ள ஜனநாதன் பெரும் பாராட்டுதலுக்குரியவராவார்.

ஜனநாதன் உலகை உலுக்கிய காதல் காவியமான ஃபியோதர் தாஸ்தாயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்" கதையை நமது தமிழ்ச் சூழலுக்கேற்ப மூலக் கதையின் இனிமை கெடாது "இயற்கை"யான காதல் காவியமாக்கி வெற்றி கண்டவர்.தனது இரண்டாவது படமான "ஈ" யில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் வியாபார நோக்கைச் சாடி தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மூன்றாவது கதைத் தளத்தை இட ஒதுக்கீட்டில் பலனடைந்த கதாநாயகன் எத்தகைய அவமானங்களுக்கும், நிராகரிப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் ஆளாக்கப்பட்டும் தனது பணியில் தொய்வின்றி நாட்டுக்கெதிரான சக்திகளுடன் போராடி வெற்றி பெறுவதாய் அமைத்துள்ளார். நாயகனின் பாத்திரம் உள்ளூர்ப் பிரச்சனைகளான உதாசீனங்கள், தீண்டாமை போன்ற அவமானகரமான கையறு நிலைகளில் அவற்றை மனதுக்குள் புதைத்து விட்டு தனது வேலைகளைக் கவனிப்பதானது பலவித பணிகளில் இதுபோன்றவர்களுக்கு தினமும் நிகழும் அவலம் என்றால் மிகையல்ல. அவனது திறமைகளில் குளிர் காயும் மேல் தட்டு வர்க்கத்தையும் தோலுரித்துக் காட்டும் இயக்குனர் தனது வசனங்களையும், காட்சியமைப்புகளையும் தானே தீவிர தணிக்கையாளராய்ச் செப்பனிட்டதின் மூலம் பொதுவாக இத்தகைய சூழலில் எந்த ஒரு மனிதனுக்கும் நிகழும் சுயபச்சாதாப உணர்வைத் தாண்டிச் செல்கிறார். அதன் மூலம் பல படிகள் உயர்ந்தும் செல்கிறார்.

ஒரு காலத்தில் சுதந்திர உணர்வுகளைத் தாங்கிச் சென்ற திரைப்படங்கள் பின்னர் திராவிடக் கருத்துக்களைத் தெருவெங்கும் கொண்டு செல்லக் காரணமாயிருந்தன. தாராள மயமாக்கலில் எதைத்தான் தாராளமயமாக்குகின்றோம் என்ற உணர்வற்ற சூழலில் பல முனைத் தாக்குதல்களால் தறிகெட்டு குறிக்கோளின்றி அலையும் இளைய சமுதாயத்தை நெறிப்படுத்த சரியான ஆளுமையில்லாத கட்சிகளும், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட் தலைமைகளும் இல்லாது தடுமாறும் நிலையில் தனி மனிதனாக ஆளுமை மிகுந்த திரைத் துறையின் மூலம் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார் இயக்குனர்.

ஐந்து கதாநாயகிகளுடன் ஒரு கதாநாயகன் என்றாலே நமது இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணங்கள் பயணிக்கும் திசை என்னவாகயிருக்கும் என்பது திரையுலகின் எழுதப்படாத விதி. ஆனால் மேலே கூறியவாறு சமூக உணர்வே இல்லாத நவீனமான சில தேசீயப் பாதுகாப்புப் படை மாணவிகளுக்கு மலைஜாதியைச் சேர்ந்த பயிற்சியாளர் நியமிக்கப்படுவதும், அதை அந்தப் பெண்கள் அருவருப்பாக உணர்வதும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதைப் போக்கில் பார்த்தோமேயானால் யார் உயரிய குணம் படைத்தோர் என்பதும் நவீனம் எப்படியெல்லாம் நம்மை நான்,எனது மற்றும் எனது வளர்ச்சிக்கென எத்தகைய செயல்களையெல்லாம் செய்யத் தூண்டுவதாயுள்ளது என்பதையும் மனதைத் தொடும் வண்ணம் சொல்லிச் செல்கின்றது இத் திரைக் காவியம்.

மார்க்ஸின் "Surplus" தத்துவத்தை திரையில் சொல்ல முடியுமா? முடியும், அதுவும் எளிமையான உதாரணங்களால் என கதாநாயகன் வாயிலாக எளிமையாய்க் கூறுகிறார் இயக்குனர். மேலதிகாரி நாயகன் மீது காட்டும் வக்கிரத்தைக் நாயகன் கண்டு கொள்ளாது மேலதிகாரி சொன்ன செயல்களைச் செய்வது மனதைச் சுடும் காட்சியென்றால் அந்த நேரம் பார்த்து தங்கள் பையனின் திறமையைக் காண வரும் பழங்குடியினத்தவரிடம் "பார்த்துட்டங்கள்ள, போங்கடா, போங்க. இனியாவது ஒங்கள்ட்ட இருக்கிறத யாருக்கும் தராம, ஒங்க கொழந்தைங்கள படிக்க வையுங்க" எனும் வடிவேலு நெஞ்சில் நிறைகிறார்.பழங்குடியின மக்களிடம் அவர்தம் விளை பொருட்களை வங்கிக் கொண்டு தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட, அவமானத்திற்காக அவர்களை ஊரைக் காலி செய்ய வைக்கும் மேலதிகாரியாக பொன்வண்ணன் தனது பங்கை சிறப்புறச் செய்துள்ளார்.

"படிக்கலைன்னத்தான் அடிப்பாங்கன்னா, படிக்கிறதுக்கும் அடிக்கிறாங்களே" என்ற மலைவாழ் சிறுவர்களின் கேள்வியும், தான் ஆங்கிலத்தில் பேசினால் "எங்களுடைய மக்களுக்குப் புரியாது, உங்களுக்குப் பிடிக்காது" என்று ஜெயம் ரவி கூறுவதும், நிர்வாணம், குலக்கல்வி மற்றும் பெண்கள் மாராப்பை சரிசெய்வதும், நகர்ப்புறப் பெண்கள் முடி ஒதுக்குவதும் குறித்த வசனங்கள் படத்தின் வெற்றிக்குப் பங்களித்துள்ளன.

சில திரையரங்குகளில் தணிக்கைத் துறையின் கட்டுப்பாட்டால்தான் வசனங்கள் விடிபட்டுப் போயுள்ளது என தட்டி வைக்கப்பட்டுள்ளதிலிருந்து , இந்தப் படத்தின் வெற்றியைத் திரைப்படத் தணிக்கைக் குழு உறுதி செய்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் அவர்கள் தணிக்கையால் விடுபட்ட வசனங்களை என்னவாகயிருக்கும் என்று உணர எத்தனிக்கும் ஆர்வம் திரையரங்குகளில் ஆரவாரமாய்ப் பெருகுகின்றது.

தங்களின் விளை பொருட்களை பணிவுடன் பிறருக்கு கொடுத்து உதவுபவர்களையும், பிறரின் பொருட்களை அதிகாரப் பிச்சையாக அபகரிக்கும் நபர்கள் யார் என்பதையும், செய்யாத செயல்களின் பாராட்டுதல்களை ஓடோடிச் சென்று பெறுபவர்கள் யார் என்பதையும், செய்த செயலின் விளைவுகளை அனுபவிக்க இயலாது போயினும் தங்களுக்குத் தரப்பட்ட பணியில் கவனம் செலுத்துபவர் யார் என்பதையும் மிகைப்படுத்தல் இன்றி இயக்குனரும், முழுப்படத்திலும் இயக்குனரின் கருத்தறிந்து அமைதியாகத் தன் பணியிணை சிறப்புறச் செய்த ஜெயம் ரவியும் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர்கள்.

மாணவிகளாய் வரும் ஐந்து பெண்களும் தங்கள் பாத்திரமறிந்து நடித்துள்ளனர். சதீஷ் குமாரின் காமிரா காடுகளினூடே தொலைந்து போனது போல் நம் கண்ணுக்குக் காடுகள் மட்டும்தான் தெரிகின்றன. நவீன தொழில் நுட்பத்தில் கிட்டத்தட்ட் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை காமிராக்காரரும், கதை நிகழும் இனிய களமான களக்காடு, முண்டந்துறைப் பகுதிகளும், இயக்குனரும் உருவாக்கியுள்ளனர். இப்படிப் பாராட்டப்பட வேண்டிய பல விஷயங்கள் இருப்பதால் கிஸ்ஸிங்கரை வீழ்த்தும் கடைசிக் கட்ட சண்டைக் காட்சியை பெரிது படுத்தத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

நல்ல சமூகக் கருத்துக்களை பெருவாரியான மக்கள் ரசிக்கும்படி, அவர்களின் கவனத்தில் தைக்கும்படி படமாக்கியுள்ளதுடன் அந்தப் படம் வெற்றிகரமானதாயிருக்கும்படிக் கொடுத்ததன் மூலம், நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் மக்கள் அதை நிராகரிக்க மாட்டார்கள் என்று மறுபடியும் ஒருமுறை மக்களை மலினப்படுத்தும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பாடம் எடுத்த இயக்குனர் ஜனநாதன் நமக்கு நல்லதொரு படத்தைக் கொடுத்துள்ளார்.

இயக்குனரின் இத்தகைய முயற்சிகள் மென்மேலும் தொடரவும், பலர் புரிந்து கொள்ளவும் வாழ்த்துவோம்.


குறிப்பு : சில திருத்தங்களுடன் பிற்படுத்தப்பட்டோருன் குரல் - நவம்பர் 2009 இதழில் வெளிவந்தது