ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

குரு பூர்ணிமாவும், குலக் கல்வியும்

குரு குலம் திருமப வருமா ?... குலக் கல்வி உயிர் பெறுமா? ...

ஆசிரியர் தினத்தை குரு பூர்ணிமாவுக்கு மாற்ற முனையும் அடிப்படைவாதிகள்..

குருவுக்கு மரியாதை செய்வதென்பது தவறாகாது, ஏனென்றால் அவர் நமது வாழ்வின் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றவராவார். ஒன்றுமறியாத குழந்தைப் பருவத்திலிருந்து நமது வாழ்வின் பாதையைச் செப்பனிடுபவர் குரு. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த குரு என்பதிலும் நமக்கு சிறு பருவத்தில் எண்ணும் எழுத்துமறிவித்து நமது மனத்தை கல்வி நோக்கித் திருப்பிய குருவை வணங்குவதில் தவறில்லை.ஆனால் அதை மதத்துடன் தொடர்பு படுத்தி வியாசர் ( வேத வியாசர்) எனும் முனிவரை அதாவது வேதங்களை நமக்குத் தந்தவர் என்ற வகையில் அவரை நினைவு கூறும் நாளாகக் கொண்டாடுவதையும், அதனை அரசின் சிந்தனைப் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய குழுவிலுள்ள ( தேசீய வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு) சிலர் வெளிப்படையாக பங்கேற்பதென்பது, அந்த வேதங்கள் யாருக்கானவை என்ற நிலையில், அது மக்களிடையேயான பிரிவுகளை (வர்ணாசிரப் பிரிவுகளை நியாயப்படுத்தும்) உறுதிப்படுத்தக் கூடியது எனும் நிலையில், எப்படி நியாயமான செயலாக இருக்க முடியும் என்பதுதான் நம்முன் எழும் கேள்வி.

இந்திய அரசு எந்த மதத்தையும் சாராத அரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகின்றது. அதற்கான அடிப்படைச் சட்ட நெறி முறைகள் உள்ளன.இத்தகைய எந்த மதத்தையும் சாராத அரசானது ஆட்சிக்கு வந்து 63 ஆண்டுகளாகின்றது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளாகின்றது. சாதி, மத பேதம் ஒழிய வேண்டும் என்று குரல் கொடுக்கும் அச்சு ஊடகங்களும், அதி மேதாவி முற்பட்ட வர்க்கமும் சமீப காலமாக மத ரீதியான பழக்கங்களை உயர்த்திப் பிடிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படையாக தெரிகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அரசானது ஆசிரியராய்த் தனது வாழ்வினைத் துவங்கி சுதந்திர இந்தியாவின் முதற் குடிமகனாய் உயர்ந்த டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவித்திருப்பதையும், அந்த நாளில் இந்த நாட்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிக் கொண்டாடி வருவதை இந்த உயர் வகுப்பும், ஊடகங்களும் மிக நன்றாக அறிந்தவர்கள்தான்.

ஆனால் மனதளவில் இவர்கள் அரசின் ஆசிரியர் தினத்தைப் பற்றிய எந்தவித அக்கறையுமின்றி, தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில், வேதங்களை அதாவது தங்களின் உயர் குடிப் பிறப்பை உறுதிசெய்யும் அடிப்படைத் தத்துவத்தை எழுதிய வேதவியாசரை நினைவு கூறும் வண்ணம் குரு பூர்ணிமாவை கடந்த ஓரிரு வருடங்களாக வெளிப்படையாகக் கொண்டாடி வருகின்றனர். அதை எந்த விதத் தயக்கமோ, வெட்கமோ இன்றி ஊடக உயர்வகுப்பு வெளியிடுவதும் தொடர்ந்து வருகின்றது. இதைவிடக் கொடுமையென்னவென்றால் இந்த மத ரீதியான குரு பூர்ணிமாக்களையும், ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளியில் மாணவர்கள் பாதபூஜை செய்வதையும் சில பிரபல ஆங்கில நாளிதழ்கள் அவ்வப்பொழுது படத்துடன் செய்தியாக வெளியிட்டு வருவதுதான். பாத பூஜை குறித்து அந்த ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான திரு ரவிக்குமார் அவர்கள் மட்டும்தான் ஆட்சேபணையைத் தெரிவித்திருந்தார்.அடிமைத் தனத்தை எவ்வகையிலாவது நிறுவனமாக்க முயலும் மேல்தட்டு வர்க்கத்தை நாம்தான் உணர்வதுமில்லை, நமது சந்ததிகளை அது குறித்து எச்சரிப்பதுமில்லை. சுயமரியாதையுடன் ஒரு சமுதாயம் அமைவதை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? தேவைப்படும் நாமே அதனை நாடுவதில்லை எனும் நிலையில் பல படித்தரங்களால் மனிதர்களை சிறுமைப்படுத்திய அவர்களிடம் எப்படி நாம் எதிர்பார்க்க இயலும்.

இன்று தேசிய வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக மாண்புமிகு பாரதப் பிரதமரால் தெரிவு செய்யப்பட்டவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஒரு நபர் தான் பொறுப்பு வகிக்கும் பதவியின் மாண்பு பற்றிக் கவலைப்படாததுடன், குறைந்த பட்சம் தான் பொறுப்புகளை ஏற்றுள்ள அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தினம் பற்றிய கவலை எள்ளளவுமின்றி தன்னால் வளர்த்து விடப்பட்ட தனது நிறுவனத்தை மேலாண்மை செய்துவரும் அதிகாரி அவரைக் குருபூர்ணிமாவன்று சந்தித்து ஆசி பெற்றதை தன்னைப் பெருமைப்படுத்தியதை கௌரவமாக நாளிதழ்களுக்குத் தர இயல்கின்றது.இன்றுவரை இவர் தன்னை ஆசிரியர் தினத்தன்று இவர்கள் சந்தித்தார்கள் என்று கூறியதுண்டா?

நமக்குத் தெரிந்த குரு யாரென்றால் ஆசிரியர்கள்தான். அவர்களுக்குத் தெரிந்த குரு ஆசிரியர் அல்ல என்பதிலிருந்து நாம் அவர்கள் குரு என்று யாரைச் சொல்வார்கள் என்பதையும் இன்னும் அறிந்து கொள்ளாமலிருப்பதுதான் நம் அறியாமை.

இது சாதாரண நிகழ்வாக, கவனிக்கப்படத் தேவையில்லாத்தாக, தேவையற்ற சர்ச்சையை உருவாக்குவதாகப் பலருக்குத் தெரியலாம். ஆனால் உண்மையில் குருகுலம் திரும்பவர வேண்டும் அதுவும் அரசின் பணத்தில் தங்கள் குழந்தைகள் மட்டும் பயிலும் வண்ணம் வர வேண்டும் என்பதின் வெளிப்பாடுதான் இது போன்ற செயல்கள் என்பது நமக்குக் காலம் கடந்த பின் தான் புரியும். இவர் போன்றவர்கள் தேசிய அரசின் கொள்கை முடிவுகளை தெரிவு செய்யும் இடத்தில் இருக்கின்றனர் என்பதையும் நாம் மனதிலிறுத்திப் பார்த்தால் நமது அச்சத்தின் காரணம் புரியும்.இவர் போன்றவர்கள் எப்படி அனைவருக்குமான வளர்ச்சியை நிர்ணயிக்க உள்ள ஆலோசனைக் குழுவில் எப்படிப்பட்ட ஆலோசனைகளைத் தருவர் என்பதுதான் கேள்வி. தங்கள் மனதிலுள்ள தங்கள் இனத்தை வளர்க்கக் கூடிய ஆலோசனைகளை நாடு வளரத் தேவையான ஆலோசனைகளாக அள்ளி வழங்குவர், அதையும் நமது முற்பட்ட இன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரியென்று வாதிடுவர்.முளையிலே கிள்ளி எறிய வேண்டிய இது போன்ற கள்ளிகளை நாமும் அழகுக்காக வளர்த்துப் பின் நமது சந்ததி இன்று ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்காக நாம் கோடரி எடுக்கும் சூழ்னிலையிலிருப்பது போல் அவர்களும் இருக்க வேண்டிய நிலை வரலாம்.

குருகுலம் வரலாம், அது சேரன் மாதேவி குருகுலம் போல் இருக்கலாம், அதனை தொண்டு நிறுவனமாக நடத்தி நமது வரிப்பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம், நமது மக்களுக்கு கல்வியை மறுப்பதாகயிருக்கலாம் அல்லது போனால் போகின்றதென்று நமக்கு தனிக்கல்வியும், தனிப்பந்தியும் கிடைக்கலாம்,அதற்கு நமது தேசிய வளர்ச்சி ஆலோசனைக் குழுவானது பரிந்துரையும் செய்யலாம். ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்குச் சரியாகச் செல்லவில்லை அதற்கான ஆலோசனையை வழங்குங்கள் என்று இந்தக் குழுவைத்தான் இது போன்ற நயவஞ்சக நிலைப்பாடுகள் பற்றி அறியாத ராகுல் காந்தி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பெரியாரா இருக்கின்றார் இவற்றை தொடர்ந்து நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்ட.. ஒவ்வொரு அசைவும் நமது உரிமையின் மீதான அத்து மீறல் என்பதை நம்மக்கள் உணரத் தலைப்படுவதோடு அதனை குறைந்தபட்சம் அரசியல் ரீதியாகக் களைய முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக