புதன், செப்டம்பர் 01, 2010

இலக்கியம்பட்டியும் இந்திய அரசியலும்

எரிக்கப்பட்ட மாணவிகளும் எரியாத நியாயங்களும் - தூக்குத் தண்டனை தவறுதான் என்றாலும் இந்த வழக்கிற்கு இது தேவையானதுதான்...

சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நமது நெஞ்சமெல்லாம் பதற வைக்கும் பேருந்து எரிப்பு வழக்கு. தலையில் கை வைத்துக் கொண்டு 'கையறு நிலையில்' செய்வதறியாது திகைக்கும் மாணவர்கள். மாணவ, மாணவிகளை உள்ளே பத்திரமாய் இருக்கச் செய்து விட்டு அந்தக் காட்டு மிராண்டிக் கும்பலிடம் மன்றாடிய பேராசியைகள். இரண்டாவதாய் வந்த பல்கலைக் கழகப் பேருந்திலிருந்து வந்து உள்ளே சிக்கியவர்களுக்காய் கண்ணாடியை உடைக்கப் போராடும் மாணவர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கருகிய மலராத மொட்டுகளாய் அந்த மாணவிகள். இதயமுள்ளோர் நெஞ்சிலெல்லாம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்த கேள்விகள். நாகரீகமுள்ள சமுதாயம் நாணித் தலைகுனிய வேண்டிய வெட்கக் கேடான செயலுக்கு மேலும் மேலும் மேல் முறையீடுகள். தனியொரு மனிதனாய் தன் மகளின் இறப்புக்கு நீதி கோரி சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறிய கோகிலவாணியின் அன்புத் தந்தை வீராச்சாமியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.


ஆம், இறுதியாக உச்ச நீதிமன்றம், சேலம் குற்றவியல் நீதிமன்ற அன்றைய நீதிபதி திரு கிருஷ்ணராஜா அவர்கள் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பாவமும் அறியாத, கவலையென்பதறியாத வாழ்வின் வாயிலில் நின்ற சின்னஞ் சிறு குழந்தைகளை குரூரமாக எரித்தவர்களுக்கு இந்தத் தண்டனை தேவைதான். ஆட்சியாளர்களின் மனதில் இடம்பிடித்து தங்கள் அரசியல் நுழைவு அல்லது உயர்வுக்கென ஆரம்பித்த சிலர் குமபல் மனோபாவத்தில் தாங்களாக வரித்துக் கொண்ட ஆணவம்தான், தங்களை யாராலும் ஒன்றும் செய்து விட இயலாது எனும் எண்ணம்தான் இந்த மூன்று மலர்களின் மரணத்தின் காரணம். ' அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கான ஆற்றல் சில சமயங்கலிள் அதிகம்தான்.
 
 
ஆட்சி மாறியதும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விசாரணையின் தடம் மாறிய பொழுதில் விபரீதத்தை உணர்ந்த கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி விசாரணை வேறு இடத்தில் நடந்திட வழி செய்ததுடன் உயர் நீதிமன்றத்தாலேயே விசாரணை அதிகாரியை நியமிக்க வழிவகை செய்ததால்தான் விசாரணையானது ஒழுங்காக நடந்திட இயன்றது. கண்ணீர் மல்க அன்று சாட்சியம் சொன்ன பேராசிரியைகள் மற்றும் சாட்சியங்கள், சக மாணவ்ர்கள் தங்கள் வாழ் நாளெல்லாம் மறக்க இயலாத அந்த்க் கோரச் சம்பவம் விதைத்த வடு ஆற இன்னும் பல காலம் பிடிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக