புதன், டிசம்பர் 01, 2010

நந்தலாலா - திரைப்படம்

தமிழில் சிறந்த படங்களைத் தரும் தரமான தயாரிப்பு நிறுவனங்களுள் குறிப்பிடத்தகுந்த நிறுவனமாக ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. பேராண்மை, அங்காடித் தெரு என்ற வரிசையில் சமீபத்தில் வெளியான சிறந்த படைப்பு நந்தலாலா. சில ஆண்டுகள் பல்வேறு விதமான காரணங்களுக்காக வெளிவருவதில் தாமதமானாலும் தமிழின் சிறந்த படைப்புகளில் இடம் பிடிக்கும் படைப்பாகும் நந்தலாலா.

கோடிகளைக் கொட்டி, நடிக, நடிகையரின் கவர்ச்சியாலும், விளம்பரத்தாலும் காசாக்க முனையும் பெரும் இயக்குனர்கள் ஒரு புறம்,

இந்தியச் சந்தை மதிப்புக் கருதி இன்னும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நவீனப்படுத்துவதாய்க் கூறிக் கொண்டு மனிதனைக் குரங்காய்க் குதிக்க வைத்து ஜல்லியடிக்கும் மெகா உலக இயக்குனர்களாக ஊடக உலகம் சித்தரிக்கும் காலியான பெருங்காய டப்பாவாய் மணக்கும் சிலர்.

ஒன்றுக்குமற்ற காரணங்களுக்கெல்லாம் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பினை நடத்தி இங்கு தங்கள் அருமை பெருமைகளை தொலைக்காட்சியில் நீட்டி முழக்கி ரசிகர்களை வசப்படுத்த எண்ணும் கூட்டம்.

இதனிடையில் இயல்பான மனதைத் தொடும் கதையமைப்பு, இதமான மனதை வருடும் இசை, தமிழகத்திலேயேயுள்ள எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு என கனவுத் தொழிற்சாலையின் பிதாமகர்களுக்கே பாடமெடுக்கும் படம். சில ஆண்டுகள் பெட்டியில் உறங்கிய, இசையமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் உரசல் என பத்திரிக்கைகள் எழுதிய, தனது மிகச் சிறந்த படைப்பாகயிருக்கும் என இயக்குனரால் கூறப்பட்ட நந்தலாலா எனும் திரைக்காவியம் தடைகளைத் தாண்டி திரைக்கு வந்துள்ளது.இந்தப் படம் வெளியாகுமா என சில சமயங்களில் தனிமையில் கண்ணீர் விட்டிருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார்.

அதே சமயம் எண்பதுகளில் தோன்றிய ஒரு இயக்குனர் குழாமைப் போல் தமிழில் ஒரு புதிய இளந்தலைமுறை இயக்குனர்கள் உருவாகி வருவதும் அவர்கள் ஒருவருக்கொருவர் பல சமயங்களில் துணை நிற்பதுவும் நமக்கு உலக சினிமாவின் உயரம் தொட உதவும் எனும் எண்ணத்தை விதைக்கின்றது. இதனைத் தற்போது ஐங்கரன் போன்ற சில தயாரிப்பு நிறுவனங்களும் உணர்ந்துள்ளது கண்கூடானது.

மிஷ்கின் எனும் கதாநாயகன் ஒரு மன நலக் காப்பகத்திலிருந்து தனது உறவுகளைத் தேடிப் பயணிப்பதும் அதன் பின் அவனுக்கு இந்த உலகில் நிகழும் அனுபவங்களும்தான் உலகின் மிகச் சிறந்த நாவலாசிரியராய் அறியப்படும் பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி எனும் ருஷ்ய எழுத்தாளரின் 'முட்டாள்' எனும் நாவலின் அடிப்படை.அன்பே அவனுக்கு சிக்கலாகவதுதான் கதை. மிஷ்கின் என்ற பெயர் இலக்கிய உலகில் அறிமுகமானது இப்படித்தான்.

கிகுஜிரோ எனும் ஜப்பானியப் படத்தின் தமிழாக்கமோ, இல்லையோ இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நமது இயக்குனர் மிஷ்கின் அவர்களும் அப்படிப்பட்ட ஒரு மன நிலை தவறிய மனிதனின் தேடுதலைத் தனது கதைக் களமாக்கியிருக்கின்றார். மன நிலை தவறுதல் என்பதா? குழந்தையைப் போல் மாறிவிட்ட உள்ளமென்பதா? என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். குழந்தைகளாக மாறாவிடில் பரலோக சாம்ராஜ்யம் கிடையாது என்று கூறிய ஏசு கிறிஸ்துவின் சிந்தனையானது, சொர்க்கம் வேறு எங்குமல்ல, உள்ளத்தில் குழந்தைகளாக மாறினால் நம்மால் இங்கு, இந்த உலகிலேயே அடைய முடியும் என்பதுதான். இந்தப் படமும் அத்தகைய உண்மையான குழந்தைக்கும், குழந்தையாக மாறிய நபருக்குமான தேடலுடன் அவர்களுக்கிடையேயான மெல்லிய அன்பின் சித்திரமாய் நம்முன் விரிகின்றது.

தாயைத் தேடும் சிறுவனுக்கும், மன நலக் காப்பகத்திலிருந்து வெளியேறித் தனது தாயைத் தேடும் பாஸ்கர மணிக்குமான நட்போடு, அவர்களின் தேடுதலில் அவர்களுக்குக் கிடைக்கும் முடிவு என்ன என்பதுதான் இதன் கதை.

மண் சார்ந்த படைப்புகளாகட்டும், இயக்குனர்களின் இதயத்திலிருந்து வரும் படைப்பாகட்டும் அதற்கு உயிரோட்டத்துடன் இசையமைக்க இந்த மண்ணின் கலைஞன் இளையராஜாதான் சரியான தேர்வாக அமைவார். அவருக்குத்தான் மௌனத்தையும் இசைக்கத் தெரியும். சிறந்த மண் சார்ந்த படைப்புகளத் தெரிவு செய்யும் இயக்குனர்கள் அனைவருமே இசைக்கு இவரை அணுகுவது இவரின் பலம். இந்தப் படத்திற்கு இவரின் இசையானது கனம் சேர்ப்பதுடன் படத்தினை செறிவு மிக்க கவிதையுமாக்கியுள்ளது. ஒண்ணுக்கொன்னு தொனையிருக்கு உலகத்திலே... அன்பு மட்டுந்தான் அனாதையா.. எனும் பாடல், வெட்டுப்பட்ட பாடல்களையும் கேட்கத் தூண்டும் ஆவலை உருவாக்குகின்றது.

இயற்கையான வரம்பு மீறாத ஒளிப்பதிவு கவிதையாய் காட்சிகளை நகர்த்திச் செல்வதுடன், நம்மை அந்தப் பாதைகளில் பயணம் செய்ய ஏங்கச் செய்வது குறிப்பிடத் தக்கது. வெளி நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நம் கண் முன், அருகிலுள்ள இயற்கையினை நம்மை மெய்மறந்து ரசிக்க வைத்த ஒளிப்பதிவாளர் படத்தின் இன்னுமொரு துணை.

நல்ல முயற்சி... நமக்குத் தந்த ஒரு சிறந்த சினிமா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக