தேவ பாஷையும்,தேச கலாசாரமும்..
அரசு, ஆன்மீகம், அறிவியல்
என்பன எல்லாமே மக்களுக்காக என்பதாகத்தான் நமது சிற்றறிவுக்குக்
கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெத்தப் படித்த மேதாவிகள், மேதாவித்தனத்தின்
குத்தகைதாரர்கள் அப்படி எண்ணுவதுமில்லை, நம்புவதுமில்லை. அதிலும் இந்த வர்ணாஸ்ரம
வாதிகளோ அடிப்படையிலேயே ஜனநாயக மாண்பினை முற்றிலுமாக மறுதலிக்கும் நபர்கள்.
சமத்துவம் என்ற சொல் அவர்களுக்கு அந்நியமானது. அதனால்தான் கல்வி வெகு ஜன மக்களுக்கு
மறுக்கப்பட்டது. தீட்டான மனித சிந்தனையால் தீட்டுப்பட்டார் கடவுளும். “உள்ளே
வாரும் பிள்ளாய்...” என்று கூற இயலாத
கடவுள், நந்தியினைப் பார்த்து “சற்றே விலகியிரும் பிள்ளாய்..” என்றுதானே கூற முடிந்தது. அந்த அளவு பலவீனமானதுதான் இந்தக்
கடவுள் தத்துவம்.
இதெல்லாம் கடந்த காலம்,
இப்பொழுது எல்லாம் சமம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம்
ஏமாற்றப்படுவதனை அன்னா வந்து நிரூபித்தார். இப்பொழுது ஒரு தேசியக் கட்சியின்
தலைவர் தனது திருவாய் மலர்ந்தருளியுள்ள கருத்துக்கள் மீண்டும் நம்மை சிந்திக்க
வைக்கின்றன.
மக்கள் பேசாத மொழிக்கு
வக்காலத்து வாங்கும் வர்ணாசிரமக் காவலர் கலாச்சாரம் சீரழிந்ததற்கு ஆங்கில மோகம்
என்று கூறுபவர், ஆங்கிலக் கல்வியின் பலன்களை அனுபவிப்பவர். இன்றைய
பிரச்னைகளுக்குக் காரணமாக ஆங்கிலத்தினைக் கூறி மக்களை நூறாண்டுகளின் பின்
எடுத்துச் செல்ல எததனிக்கின்றார். அப்பொழுதுதானே அவர்கள் விரும்பும் வர்ணாஸ்ரமம்
பாதுகாக்கப்படும். அதுதான் அவரது உள்ளக் கிடக்கை.
மக்களின் துயருக்கான விடையைத்
தேடியலைந்த, சிந்தித்த புத்தர் தனது கோட்பாடுகளை விளக்கியது பாலி மொழியில். அதாவது
அன்றைய மக்களின் மொழியில்.
தொழில் நுட்பப்
புரட்சியால் விளைந்த நன்மை (ஒருவகையில் கேடு எனவும் கூறலாம்) அவரவர் மொழிகளில்
தொலைக்காட்சி, 24 மணி நேரமும் தங்கு தடையின்றி. ஒரு காலத்தில் தமிழில் ஒளிபரப்பு
நேரம் அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காக தொலைக்காட்சி நிலையத்தின் முன்பாக
தொலைக்காட்சிப் பெட்டியினை உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது நினைவு கூரத்தக்கது.
ஆனால் இன்று ஹாலிவுட்டில் வெளிவரும் படங்கள் கூட வசூலை மையப்படுத்தி ஓரிரு
நாட்களில் நம் தாய் மொழியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மலையிடம் மஹம்மது
வராவிட்டால், மஹம்மதுவிடம் மலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதானே உண்மை. இந்து
மதக் காவலராய் இவர்கள் காட்டும் விவேகானந்தரும் கூட அதைத்தானே கூறினார். நமது
கல்விக் கூடங்கள், மதிய உணவுத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகச் சிந்தித்த
சமத்துவக் கோட்பாட்டில் முழு நம்பிக்கையுடைய தலைவர்களால் விளைந்தவைதானே!
கல்வியை மக்களுக்குத்
தரத் தயங்கிய மத அடிப்படைவாதிகள் உயர்த்திப் பிடிக்கும் மொழிக்கு வக்காலத்து
வாங்கும் நபர் சாதரணமானவரென்றால் கூட நாம் அமைதியாயிருந்து விடலாம். ஆனால் அவர் ஒரு
அகில இந்தியக் கட்சியின் தலைவராக இருப்பதானால் இதனை நாம் உற்று நோக்க
வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் திட்டம் என்ன? மீண்டும் சமஸ்கிருதம், வர்ணாஸ்ரம்,
கல்வி மறுப்பு அல்லது குலத்துக்கான கல்வி என்பதா என்பதையும் அவர் தெளிவு படுத்தி
விடலாமே., மொழி நம்மைப் பொறுத்தவரை சிந்தனைகளைக் கொண்டு செல்லும் சாதனம் தவிர அதன்
மேன்மையும் தாழ்வும் பயன்படுத்துவோரின் கையிலுள்ளது. வலிந்து திணித்த ஹிந்தியாவது
பேச்சு வழக்கில் உள்ள மொழி. ஆனால் இந்த சமஸ்கிருதம்..
தமிழகத்தின் அரசியல்
மேதாவியென இவர்கள் உச்சுக் கொட்டும் நபர், ஊடக உலகம் அழுது அடம் பிடிக்கும் சோ
ராமசாமி, பத்தாண்டுகளின் முன்பாக பாலியில் கல்வி தேவையா? இல்லையா? என்ற விவாதம்
நடந்த பொழுதில் ஆடு மாடுகளெல்லாம் கற்றுக் கொள்கின்றனவா என்ன? என்று வாயாடினார்.
அதற்கு பதிலடியாக மன நல
மருத்துவர் ருத்ரன் அவர்கள், ஆடு மாடுகளெல்லாம் பத்திரிக்கை நடத்துவதுமில்லை,
படிப்பதுமில்லை என்று சூடு கொடுத்ததும் நடந்த கதைதான்.
ஏன் இந்த மேதாவிகள்
தங்களின் பத்திரிக்கையை அந்த தேவ பாஷையில் அச்சடித்து தேவநாதன்களுக்குத்
தருவதில்லையென்பது அந்தத் தேவர்களுக்குத்தான் தெரியும்.
நாங்க ரொம்ப ரொம்ப
நல்லவய்ங்க என மூச்சுக்கு மூச்சு கூறிக் கொள்ளும் பத்திரிக்கைக் குழுமம், தனது
அனைத்து பத்திக்கைகளுக்கும் தனது லேபிளை ஒட்டி மு.க வீட்டு நாய்க்குட்டி உச்சா
போனது என்ன இருந்தாலும் தவறுதான்.. என்று கட்டுரை வெளியிட்டு புல்லரித்துப் போகும்
நிலையில் சமீபத்தில் “டைம் பாஸு” க்காக ஒரு
பத்திரிக்கையை கொண்டு வந்துள்ளது. அதற்கு மட்டும் லேபிள் ஒட்டவில்லை. ஏனென்றால்
அது மலிவு விலையில் மனித வக்கிரத்துக்குத் தீனி போட்டு கல்லா கட்ட முடிவு செய்து
வெளியிடுவதால்தான்.
அகில இந்திய அளவிலும் கூட
இவர்கள் தங்கள் பத்திரிக்கைகளையும், தங்கள் கூட்டங்களையும் அந்தத் தேவ பாஷையில்
நடத்தி ஆட்சிக்கு வரும் கனவுகளைக் காணலாமே. ஓட்டு வாங்க அந்தத் தேவ பாஷை உதவாது
என்பதால்தானே, மக்கள் மொழியில் ஏமாற்றி நாமம் போட வருகின்றனர். மக்களாட்சியில்
மக்கள் மொழிகளின் மேல் இவர்களுக்கு உள்ள வன்மமும், தேவ பாஷையின் மேலுள்ள காதலும்
அவர்களின் அடிப்படை. ஆண்டவனுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும் என்று அடம் பிடிக்கும்
சனாதனம் இன்னும் வற்றிப் போய்விடவில்லை. அவதாரங்கள் பல. அதில் இது ஒரு ரகம்.
அவர்கள் எப்படியாவது வர்ணாஸ்ரமம், சமஸ்கிருதம்,ஆன்மீகம் என்று தங்கள் குறிக்கோளில்
தெளிவாயுள்ளனர், விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக